2011-04-07 14:31:35

ஏப்ரல் 08 வாழ்ந்தவர் வழியில்.....


மங்கல் பாண்டே (Mangal Pandey) என்பவர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது படைப்பிரிவில் ஒரு படை வீரராக இருந்தவர். உத்தரப் பிரதேசத்தில் நாக்வா (Nagwa) என்ற கிராமத்தில் 1827ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி பிறந்த இவர், 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியில் தனது 22வது வயதில் இணைந்தார். கல்கத்தாவின் பராக்பூர் நகரில் 1857ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி மாலையில் 34வது படைப்பிரிவில் உள்ள பல படைவீரர்கள் கிளர்ந்தெழுந்த நிலையில் உள்ளார்கள் என லெப்டினண்ட் போ (Baugh) என்பவருக்கு அறிவிக்கப்பட்டது. அத்துடன் அவர்களில் மங்கள் பாண்டே என்பவர் துப்பாக்கியுடன் மற்றைய படைவீரர்களைக் கிளர்ச்சிக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்ததாகவும் முதலில் காணும் வெள்ளைக்காரரைச் சுட்டு விடுவதாகவும் பயமுறுத்திக் கொண்டிருப்பதாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. போ உடனேயே தனது குதிரையில் ஏறி வாளையும் உருவிக்கொண்டு படைவீரர்களை நோக்கிச் சென்றார். குதிரைச் சத்தத்தைக் கேட்ட பாண்டே அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுட்டார். எனினும் அது குறி தவறி குதிரையைத் தாக்கியது. போ பாண்டேயை நோக்கிச் சுட ஆரம்பித்தார். பாண்டே தனது வாளை உருவி போவைத் தாக்கிக் காயப்படுத்தினார். அதன் பின்னர், பாண்டே மேலும் தாக்காதாவாறு ஷேக் பால்ட்டு (Shaikh Paltu) என்ற வேறொரு படைவீரர், பாண்டேயைத் தடுத்து நிறுத்தினார். பாண்டே பின்னர் கைது செய்யப்பட்டார். ஒரு வாரத்திற்குப் பின்னர் நடந்த விசாரணையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1857ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பாண்டே தூக்கிலிடப்பட்டார். 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக மே 6 ஆம் நாள் கலைக்கப்பட்டது. மங்கல் பாண்டேயின் தாக்குதல் இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாக இருந்ததாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. மங்கல் பாண்டே இந்திய விடுதலைப் போராட்ட "தியாகி" எனவும் நோக்கப்படுகிறார். மங்கல் பாண்டேயின் வரலாற்றைச் சித்தரிக்கும் The Rising என்ற திரைப்படம் 2005இல் வெளிவந்தது. மேலும் சில திரைப்படங்களும் வெளி வந்தன. இந்திய அரசு தனது நாட்டுத் தியாகி மங்கல் பாண்டே நினைவாக 1984ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி அஞ்சல் தலைகளையும் வெளியிட்டது. நாக்வா கிராம மக்கள் மங்கல் பாண்டேயையே தங்கள் முன்னோராகக் குறிப்பிடுவர். பாண்டே மிகவும் தீவிரமான இந்துவாக இருந்தார். பாண்டே சேர்ந்திருந்த 34வது படைப்பிரிவினரே அதன் பிரித்தானிய அலுவலர்களைத் தாக்கிச் சிப்பாய்க் கலகம் அல்லது இந்திய விடுதலைப் போரை 1857ம் ஆண்டில் ஆரம்பித்து வைத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
“ஒரே நோக்கைக் கொண்டிருப்போர் விரைவிலேயே வெற்றி பெறுவார்கள்”







All the contents on this site are copyrighted ©.