2011-04-06 15:39:37

திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வைக் குறித்து புதுத் தகவல்கள்


ஏப்ரல் 06,2011. இறையடியார் இரண்டாம் ஜான்பால் பரிந்துரையால் Parkinson நோயிலிருந்து குணமான பிரெஞ்ச் நாட்டு அருள்சகோதரி Marie-Simon-Pierre மற்றும் இரண்டாம் ஜான்பாலுக்குத் தனிப்பட்டச் செயலராக பணிபுரிந்த Krakow பேராயர் கர்தினால் Stanislaw Dziwisz ஆகியோர் ஏப்ரல் மாதம் 30ம் தேதி உரோம் நகர் Circus Maximus பொதுத் திடலில் நடைபெறும் திருவிழிப்புச் சடங்கில் தங்கள் சாட்சிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று திருத்தந்தையின் உரோம் நகரப் பிரதிநிதியான கர்தினால் Agostino Vallini கூறினார்.
மே மாதம் முதல் தேதியன்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வைக் குறித்து இச்செவ்வாயன்று வத்திக்கானில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் கர்தினால் Vallini இவ்வாறு கூறினார்.
திருச்சபையில் ஒருவர் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்பட்டதும், அவர் பெயரால் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலிகள் முத்திபேறு பெற்றவரோடு தொடர்புடைய ஒரு சில இடங்களிலேயே கொண்டாடாப்படுவது திருச்சபையின் வழிமுறை. அவர் புனிதராக உயர்த்தப்பட்ட பிறகே, அவரது திருப்பலி உலகெங்கும் கொண்டாடப்படும். ஆனால், திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் உலகமனைத்திற்கும் அறிமுகமானவர் என்பதால், இவரது திருப்பலிகள் இன்னும் பல இடங்களில் கொண்டாடப்படுவதற்கு வத்திக்கான் உத்திரவு வழங்கக்கூடும் என்று கர்தினால் Vallini இக்கூட்டத்தில் அறிவித்தார்.
இரண்டாம் ஜான்பாலின் உடல் அடங்கிய பெட்டியானது புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் தரைமட்டப் பகுதியில் உள்ள புனித செபஸ்தியாரின் பீடத்திற்குக் கொண்டுவரும் பணி நடைபெற உள்ளதால், பேராலயத்தின் கீழ்மட்டப் பகுதியானது ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.இந்த முழு நிகழ்ச்சியின் வர்ணனைகள் வத்திக்கான் வானொலியின் பண்பலை 105ல் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பல்வேறு மொழிகளில் ஒலிபரப்படும் என்றும் அருள்தந்தை Lombardi கூறினார்.







All the contents on this site are copyrighted ©.