2011-04-05 15:54:30

விவிலியத்
தேடல்


RealAudioMP3
கிறிஸ்தவ அடக்கச் சடங்குகளில் அல்லது திருப்பலியில் திருப்பாடல் 23 பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இத்திருப்பாடலின் இறுதி வரிகளான "நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள், (என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்" என்ற ஆறுதலான வரிகள். அமைதியும், நம்பிக்கையும் தரும் வரிகள். மரணத்தைப் பல கோணங்களில் இருந்து நாம் பார்க்கலாம். பல உருவகங்களால் விவரிக்கலாம். பல மதங்களில் மரணத்தைக் குறிக்கும் பொதுவான இரு உருவகங்கள் வீடு சேர்வது அல்லது கரை சேர்வது. இவ்விரு உருவகங்களில் அழுத்தமாக ஒலிக்கும் ஒரு கருத்து... நிம்மதி, நிறைவு.

கிறிஸ்தவ அடக்கச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் ஓர் அழகிய செபம் என் நினைவுக்கு வருகிறது. "இறைவா, உம் விசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதே அன்றி அழிக்கப்படுவதில்லை." இந்த மாற்றத்தைப் பல உருவகங்களில் நாம் சிந்திக்கலாம். இந்த உலக வாழ்வு ஒரு பயணம்; விண்ணகம் நாம் சென்றடைய வேண்டிய இடம். இந்த உலகம் நாம் வாழும் ஒரு வாடகை வீடு; விண்ணகம் நாம் வாழப்போகும் நிரந்தர வீடு. இந்த உலக வாழ்க்கை ஓர் இரவு விளக்கு. விண்ணகம் காலைப் பொழுது. காலைப் பொழுது விடிந்துவிட்டால், இரவு விளக்கை அணைத்து விடுகிறோமே, அதுதான் மரணம். எஸ்கிமோ மக்கள் மத்தியில் விண்ணகம் பற்றி ஓர் அழகிய பழமொழி கூறப்படுகிறது. வானில் மின்னும் விண்மீன்களை அவர்கள் வித்தியாசமாகப் பார்த்துள்ளனர். "வானத்தில் மின்னுவது விண்மீன்கள் அல்ல. நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ள அன்புள்ளங்கள் விண்ணகத்திலிருந்து மகிழ்வோடு நம்மீது தங்கள் அன்பைப் பொழிய அவர்கள் ஏற்படுத்தியுள்ள இடைவெளிகளே விண்மீன்களாய் மின்னுகின்றன."
“Perhaps they are not stars, but rather openings in heaven where the love of our lost ones pours through and shines down upon us to let us know they are happy.” - Eskimo proverb
இவ்விதம், மரணத்திற்கு, இவ்வுலக வாழ்வுக்கு, மறு உலக வாழ்வுக்கு, விண்ணகத்திற்கு நாம் கூறும் பல அழகிய உருவகங்கள் உள்ளன.

உருவகங்கள் மட்டுமல்ல, மரணம், அதன்பின் வரும் விண்ணகம், இறைவனின் இல்லம் இவற்றைப்பற்றி பல கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம். கடந்த வாரம் மின்னஞ்சலில் எனக்கு வந்திருந்த ஒரு கதை மரணத்தைப் பற்றிய மற்றொரு அழகான கருத்தை எனக்கு உணர்த்தியது. இதோ அக்கதை:

இளம் பெண் ஒருவருக்கு குணப்படுத்த முடியாத நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இன்னும் ஒரு வாரம் வாழ்வதே கடினம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். செய்தி கேட்டு, அந்த இளம்பெண் மனமுடைந்து போனாலும், விரைவில் தெளிவு பெற்றார். தன் இறுதிச் சடங்குகளுக்குத் தேவையானவற்றை அவரே முடிவு செய்தார். பங்குத் தந்தையை அழைத்து, தன் முடிவுகளைத் தெரிவித்தார்.
தன் அடக்கத் திருப்பலியில் என்னென்ன வாசகங்கள் வாசிக்க வேண்டும், தனக்குப் பிடித்தமான பாடல்கள் என்னென்ன பாடவேண்டும் என்று அவரிடம் கூறினார். அவைகளையெல்லாம் பங்குத்தந்தை குறித்துக் கொண்டார்.
அவர் கிளம்பும் நேரத்தில், அந்த இளம்பெண் அவரிடம், "சாமி, ஒரு முக்கிய விஷயம்..." என்றார். குரு நின்றார். "என்னைச் சவப்பெட்டியில் வைத்தபின், என் வலது கையில் ஒரு முள்கரண்டியையும் வைக்க வேண்டும்." என்று அந்தப் பெண் சொன்னதும், குரு குழப்பத்துடன், ஆச்சரியத்துடன் அப்பெண்ணைப் பார்த்தார். இளம்பெண் தன் புதிரை விளக்கினார்:

"என் பாட்டி என்னிடம் ஒரு அனுபவத்தைக் கூறி, அதன் கருத்தையும் கூறினார். நானும் என் நண்பர்கள் மத்தியில் இந்த கருத்தை அடிக்கடி கூறியுள்ளேன். பாட்டி எனக்குச் சொல்லித் தந்தது இதுதான். விருந்து நடக்கும்போது, நாம் சாப்பிட்ட தட்டுகளை எடுத்துச் செல்வர். அப்போது, 'உங்கள் முள்கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள்' 'Keep the fork' என்று யாராவது சொன்னால், ஒரு தனி ஆனந்தம் வரும். அதாவது, இன்னும் சுவையுள்ள உணவு வகைகள் வரவிருக்கின்றன என்பதன் மறைமுகமான அறிவிப்பே 'முள்கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள்' என்ற அன்புக் கட்டளை. வாழ்க்கையோடு இந்த அனுபவத்தை ஒப்புமைப்படுத்தி 'நல்லவைகள் இன்னும் வரும்' என்ற எதிர்பாப்புடன் வாழ்வதே மகிழ்வான வாழ்க்கை என்று என் பாட்டி எனக்குச் சொல்லித் தந்தார். நான் சவப்பெட்டியில் படுத்திருக்கும்போது, என் கையில் உள்ள முள்கரண்டி பலருக்குக் கேள்வியை எழுப்பும். அவர்களுக்கு நீங்கள் இந்தச் செய்தியைச் சொல்லுங்கள்.... 'நல்லவைகள் இன்னும் வரும், அதனால், முள்கரண்டியை வைத்திருங்கள்' என்று நான் சொன்னதாக என் அடக்கத்திற்கு வரும் அனைவருக்கும் தயவு செய்து சொல்லுங்கள் சாமி..." என்று அந்த இளம்பெண் விளக்கியபோது, பங்குத்தந்தையின் கண்களில் கண்ணீர் மல்கியது.

தான் பல ஆண்டுகள் மரணத்தைப் பற்றி படித்தது, சிந்தித்தது, தியானித்தது எல்லாவற்றையும் விட, இந்த இளம் பெண் மரணத்தைப் பற்றி சொன்ன அந்த எளிய, அற்புதமான எண்ணங்கள் அவரை அதிகம் பாதித்தன. 'நல்லவைகள் இன்னும் வரும், எனவே முள்கரண்டியை வைத்திருங்கள்.' என்பதே அந்தப் பெண்ணின் அடக்கத் திருப்பலியில் பங்குத் தந்தை சொன்ன ஒரே செய்தியாக இருந்தது. கேட்ட அனைவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இளவயதிலேயே அந்தப் பெண்ணை இழந்ததால் உண்டான சோகமும், அந்தப் பெண் விட்டுச் சென்ற செய்தியின் ஆழத்தை உணர்ந்ததால் உண்டான மகிழ்வும் அவர்கள் கண்ணீரில் கலந்திருந்தன.

மரணம் வாழ்வின் மறுகரைக்கு நம்மை அழைத்துச் செல்லும். அங்கு, இறைவனின் இல்லம் செல்லும்போது, கையில் முள்கரண்டியை எடுத்துச் செல்லும் மனநிலையோடு 'இன்னும் நல்லவைகள் நமக்குக் காத்திருக்கின்றன என்ற எதிர்பார்ப்புடன் நாம் அந்த இல்லத்தில் நெடுநாள் வாழச் செல்வோமே!

இந்த விண்ணகம், இறைவனின் இல்லம் மரணத்திற்குப் பின்தான் நம்மை வந்து சேருமா? அல்லது இந்த உலகிலேயே இந்த இல்லத்தை, அங்கு வாழும் ஒரு நிறைவான வாழ்வை நாம் உணர முடியுமா? மண்ணில் விண்ணகத்தைக் கொண்டு வர முடியுமா? அல்லது, மண் நம்மை மூடி மறைத்தபின்னரே விண்ணகம் தோன்றுமா? இந்தக் கேள்விகள் பல சவால்களை எழுப்பியுள்ளன. திருப்பாடலின் ஆசிரியர் இந்த வரியில் "நானும் ... வாழ்ந்திருப்பேன்." என்று கூறியிருப்பது, எதிர்காலத்தில் நடக்க விருக்கும் ஒரு கனவாக ஒலிக்கிறது.

இதுபோன்ற மறுவாழ்வின் கனவுகள் பல கறுப்பின மக்களின் பாடல்களாய் உருபெற்றுள்ளன. அமெரிக்காவில் அடிமைத் தளைகளில் அதிகம் துன்புற்ற இவர்கள் Negro Spiritual என்ற ஒரு வகைப் பாடல்களைப் பாடி தங்கள் துன்பங்களுக்கு விடை தேடினர் என்று சொல்லப்படுகிறது. விடை எதுவும் கிடைக்காதபோதும், இந்தப் பாடல்கள் நம்பிக்கை தந்தன. இவை புரட்சிப் பாடல்கள் அல்ல, மாறாக, இறைவன் இருக்கிறார்...அவர் பார்த்துக் கொள்வார்... அவரிடம் நான் செல்லும் நாளுக்காக ஏங்கியிருக்கிறேன்... என்ற கருத்துக்கள் அடங்கிய அழகானப் பாடல்கள். இந்த உலகில் எது நடந்தாலும், உன் கண்கள் அடுத்த உலகின் மீது பதியட்டும். அப்போது நீ இப்போது படும் துன்பங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்ற கருத்தோட்டம் இது. இதையே பவுல் அடியாரும் தன் திருமுகங்களில் கூறியுள்ளார்.

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4 : 8-9,
நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை: குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப் படுவதில்லை: வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5 : 1, 6, 8
நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!... ஆகவே நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம்...இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.

இறைவனின் இல்லம் இனி வரும்; அதுவரை காத்திருப்போம் என்ற கனவால் உலகில் நடக்கும் தீமைகளை, அநீதிகளைத் தட்டிக் கேட்காமல் இருப்பதா? என்ற கேள்வி எழுகிறது. இறந்தபின் அடுத்த உலகில் நான் மகிழ்வாக இருப்பேன் என்பதற்காக, இந்த உலகில் நான் தினமும் சாக வேண்டுமா? இதுதான் கடவுளின் விருப்பமா? என்ற கேள்விகள் எழுகின்றன. விடுதலை இறையியல் என்ற கண்ணோட்டத்தில் வேறுபட்ட எண்ணங்கள் சொல்லப்பட்டன. மறு உலகில் கிடைக்கப்போகும் இறைவனின் இல்லத்தை, இறைவனின் அரசை இந்த உலகிலேயே கட்டியெழுப்பவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்ற எண்ணங்களும் இன்று நம்மிடையே அதிகம் உள்ளன.

இறைவனின் அரசை, அல்லது அவரது இல்லத்தை காத்திருந்து மறு உலகில் பெறுவதானாலும் சரி, இவ்வுலகில், இப்போதே கட்டி எழுப்புவதானாலும் சரி, அந்த முயற்சிகள் முதலில் நம் உள்ளங்களில் இருந்து ஆரம்பமாக வேண்டும்.

ஒரு கதை, நாடகம் அல்லது திரைப்படம் இவற்றில் இறுதிப் பகுதிதான் மிகச் சிறந்த பகுதியாக இருக்கும். நல்லதொரு, சுகமான முடிவை நோக்கிச் செல்லும் கதையில் இந்த இறுதிப் பகுதியை வாசிக்கும்போது, அல்லது பார்க்கும்போது மனதில் ஒரு நிறைவு தெரியும். கதையின் பெரும் பகுதியில் கோபம், சோகம், குழப்பம், படபடப்பு என்று பல உணர்வுகளை நாம் அடைந்திருந்தாலும், இந்த இறுதிப் பகுதியில் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, மனம் மகிழ்வில் நிறையும்.

திருப்பாடல் 23ன் இறுதியில் இத்தகையதொரு உணர்வை நாம் பெறுகிறோம். இப்பாடல் முழுவதுமே அழகிய பல எண்ணங்கள் ஒவ்வொரு திருவசனத்திலும் சொல்லப்பட்டிருந்தாலும், இந்த இறுதித் திருவசனத்தில், அதிலும் சிறப்பாக இந்த இறுதி வரியில் மிக உன்னதமான, உயர்ந்த எண்ணங்கள் சொல்லப்பட்டுள்ளன. "நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள், (என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்"








All the contents on this site are copyrighted ©.