2011-04-05 15:27:48

தெற்காசியாவில் 65 விழுக்காட்டினருக்கு அடிப்படை நலவாழ்வு வசதிகள் இல்லை- யூனிசெப்


ஏப்ரல்05,2011. தெற்காசிய நாடுகளில் போதுமான நலவாழ்வு வசதியின்மை, சுகாதாரமற்ற நடத்தைகள் போன்றவற்றால் அப்பகுதியின் ஆண்டு உற்பத்தியில் 5 விழுக்காடு இழப்பு ஏற்படுகின்றது என்று யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தை நல நிதி அமைப்பு அறிவித்தது.
இலங்கையின் கொழும்புவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள தெற்காசிய பொது நலவாழ்வு மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்த யூனிசெப் நிறுவனம், சுமார் 150 கோடி மக்கள் வாழும் தெற்காசியாவில் ஏறக்குறைய 65 விழுக்காட்டினருக்கு இன்றும்கூட அடிப்படை நலவாழ்வு வசதிகள் இல்லை எனத் தெரிவித்தது.
தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 28 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் கடும் நலவாழ்வுப் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள் உட்பட அனைத்து தெற்காசிய நாடுகளின் நலவாழ்வுத்துறையின் மூத்த அமைச்சர்களும் செயலர்களும் கலந்து கொள்கின்றனர்.
வல்லுனர்களின் கணிப்புப்படி இலங்கையில் 95 விழுக்காட்டினருக்குப் போதுமான நலவாழ்வு வசதிகள் இருப்பதாகத் தெரிகிறது.
மேலும், 2015ம் ஆண்டுக்குள் அறுபதாயிரம் கிராமங்களைச் சுத்தம் செய்வதற்குச் சீனா தீர்மானித்திருப்பதாக அந்நாட்டு Xinhua செய்தி நிறுவனம் அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.