2011-04-05 15:54:18

ஏப்ரல் 06, வாழ்ந்தவர் வழியில்...


அமைதிப் பூங்காவாக இருந்த அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து 1930ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி புயலொன்று புறப்பட்டது. அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்திஜி தன் உப்பு சத்யாகிரக நடைப்பயணத்தை ஆரம்பித்தார். அந்த நடைப்பயணம் 1930ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தண்டி கடற்கரையில் முடிவுற்றது. அந்தக் கடற்கரையில் காந்திஜி உப்பு நீர் கலந்த மண்ணைக் கையில் எடுத்து, பிரித்தானியப் பேரரசு இனி அசைந்து விடும் என்று உறுதிமொழி எடுத்தார்.
உப்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலேயே கருத்து வேறுபாடுகள் இருந்தன. பிரித்தானிய அதிகாரிகள் காந்திஜியின் இந்த முயற்சியைக் கண்டு அவரை ஏளனம் செய்தனர். ஆயினும், காந்திஜியின் எண்ணம் தெளிவாக இருந்தது. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு மிகவும் தேவையான ஆதாரம் உப்பு. எனவே, அதைக் கொண்டு பிரித்தானிய அரசை எதிர்த்தால், சாதாரண மக்களும் நாட்டின் விடுதலைக்குப் போராட முன்வருவார்கள் என்று காந்தி கருதினார்.உப்பு சத்தியாகிரகம் பெரும் வெற்றி பெற்றதைக் கண்டு, பிரித்தானிய அரசு ஓரளவு ஆட்டம் கண்டது. இதன் வெற்றியைக் கண்ட நேரு, "இந்தப் புரட்சி நாட்டிற்கு ஒரு புது வசந்தத்தைக் கொண்டு வந்துள்ளது." என்றார். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, பல வன்முறையற்ற போராட்டங்கள் இந்தியாவில் எழுந்தன.







All the contents on this site are copyrighted ©.