2011-04-05 15:21:35

Duekoue நகரில் சுமார் ஆயிரம் அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளனர் அல்லது காணாமற்போயுள்ளனர் - சர்வதேச காரித்தாஸ்


ஏப்ரல்05,2011. ஆயுதம் தாங்கிய கடும் மோதல்கள் அதிகரித்து வரும் ஐவரி கோஸ்ட் நாட்டின் Duekoue நகரில் சுமார் ஆயிரம் அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளனர் அல்லது காணாமற்போயுள்ளனர் என்று சர்வதேச காரித்தாஸ் நிறுவனம் அறிவித்தது.
உதவி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான சடலங்களை மீட்டு வருகின்றன என்றுரைத்த சர்வதேச காரித்தாஸ், ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் அப்பாவி பொது மக்கள் மீதானத் தாக்குதல்களை வன்மையாயக் கண்டித்துள்ளது. அத்துடன் அந்நாட்டில் பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது.
ஐவரி கோஸ்டில் கடந்த நவம்பர் 28ம் தேதியன்று இடம் பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் Alassane Ouattara வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ஏற்க மறுத்த அப்போதைய அரசுத்தலைவர் Laurent Gbagbo பதவி விலக மறுத்து வருகிறார். இதனால் இவ்விருவரின் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் சண்டைகள் இடம் பெற்று வருகின்றன.
அபிஜான் பகுதியில் மட்டும் முப்பதாயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். மேலும், இருபதாயிரம் மக்கள் Duekoue கத்தோலிக்க மறைப்பணித்தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று அந்நாட்டு ஆயர் Gaspard Beby Gneba கூறினார்.







All the contents on this site are copyrighted ©.