2011-04-04 17:02:50

காஷ்மீரில் பணியாற்றி வந்தவெளிநாட்டு குரு ஒருவர் நாட்டை விட்டு வெளியேற அரசு உத்தரவு


ஏப்ரல் 04, 2011 இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் கடந்த 48 ஆண்டுகளாக கல்விப்பணியாற்றி வரும் வெளிநாட்டு குரு Jim Borst ஏழு நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லையெனில் வெளியேற்றப்படுவார் என உத்தரவு பிறப்பித்துள்ளது காஷ்மீர் மாநில அரசு.
Mill Hill என்ற கத்தோலிக்க மறைபோதகச் சபையைச் சார்ந்த இக்குரு, 2014ம் ஆண்டு வரை நாட்டில் தங்குவதற்கான அனுமதியைக் கொண்டிருந்தும் ஏற்கனவே ஒருமுறை கடந்த ஜூலை மாதத்தில் இத்தகைய உத்தரவு ஒன்று வழங்கப்பட்டிருந்தார். அந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லையெனினும், தற்போது இரண்டாம் முறையாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதே உண்மையாக இருக்கும் நிலையில், குரு Borst, மக்களை மதம் மாற்றி வருகிறார் என்பது பொய்யான ஒரு குற்றச்சாட்டு என்று கூறிய ஜம்மு காஷ்மீர் ஆயர் பீட்டர் செலஸ்டீன், தற்போது காஷ்மீரில் 0.014 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள் என்றார்.
குரு Borst காஷ்மீரில் நடத்தும் இரு பள்ளிகளுள் ஒன்றில் 99 விழுக்காடு பணியாளர்கள் இஸ்லாமியர்களே என்பதையும் சுட்டிக்காட்டினார் ஆயர்.
காஷ்மீரின் கல்விப்பணியில் அதிக ஆர்வம் கொண்டு செயலாற்றி வரும் இக்குரு வெளியேற்றப்பட்டால் அது அம்மறைமாவட்டத்திற்குப் பேரிழப்பாய் இருக்கும் எனவும் கவலையை வெளியிட்டார் ஆயர் செலஸ்டீன்.
குரு Borstன் இரு கல்வி நிலையங்களுக்கு அருகே பள்ளிக்கூடங்களைக் கொண்டிருக்கும் சில இஸ்லாமியர்களே பொறாமையின் காரணமாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை வெளியேற்றுவதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதாக இக்குருவுடன் பணிபுரிவோர் அறிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.