2011-04-02 15:10:53

ஞாயிறு வாசகங்கள்


I சாமுவேல் - முதல் நூல் 16: 1, 6-7, 10-13
II எபேசியருக்கு எழுதிய திருமுகம் 5: 8-14

யோவான் நற்செய்தி 9: 1-41 (குறுகிய வாசகம்)
அக்காலத்தில் இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, “நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்றார். சிலோவாம் என்பதற்கு ‘அனுப்பப்பட்டவர்’ என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார். அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், “இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?” என்று பேசிக்கொண்டனர். சிலர், “அவரே” என்றனர்; வேறு சிலர் “அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்” என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், “நான்தான் அவன்” என்றார்.
முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள். இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்தநாள் ஓர் ஓய்வுநாள். எனவே, “எப்படிப் பார்வை பெற்றாய்?” என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர், “இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்றார். பரிசேயருள் சிலர், “ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது” என்று பேசிக் கொண்டனர். ஆனால் வேறு சிலர், “பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?” என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், “உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் கேட்டனர். “அவர் ஓர் இறைவாக்கினர்” என்றார் பார்வை பெற்றவர். அவர்கள் அவரைப் பார்த்து, “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?” என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்” என்றார். அவர், “ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.







All the contents on this site are copyrighted ©.