2011-04-01 16:15:23

ஐவரி கோஸ்டின் ஆயுதம் தாங்கிய மோதல்களில் அருட்பணியாளர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : திருப்பீடத் தூதர்


ஏப்.01,2011: மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் தற்போது இடம் பெற்று வரும் கடும் மோதல்களில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் கத்தோலிக்க அருட்பணியாளர்களைக் குறிவைத்துச் செயல்படுகிறார்கள் என்று அந்நாட்டிற்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madtha கூறினார்.
ஐவரி கோஸ்ட் நாட்டுத் தலைநகர் அபிஜான் காரித்தாஸ் இயக்குனர் Richard Kissi, இச்செவ்வாயன்று ஆயுதம் தாங்கிய குழுக்களால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து பேட்டியளித்த பேராயர் Madtha, தற்சமயம் அந்நாட்டில் நடப்பதை உள்நாட்டுப் போர் என்று சொல்ல முடியாது, ஆனால் புரட்சிப்படைகள் முக்கிய நகரங்களைத் தாக்கி வருகின்றன என்றார்.
இந்த மோதல்களில் இரண்டு தரப்பினருமே பொதுவாக கத்தோலிக்க ஆலயங்களை மதிக்கின்றனர், எனினும் படைவீரர்கள் புரட்சிப்படைவீரர்களைத் தேடி குறைந்தது ஓர் ஆலயத்தில் நுழைந்துள்ளனர் என்றார் பேராயர்.
இதற்கிடையே, ஐவரி கோஸ்ட் நாட்டில் ஆலயங்களில் புகலிடம் தேடியுள்ள சுமார் பத்தாயிரம் அப்பாவி பொதுமக்களைப் பாதுகாப்பதற்கென அவ்விடங்களுக்கு ஐ.நா.அமைதிகாக்கும் படைகள் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் Duékoué நகர் பகுதியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா.கூறியது.







All the contents on this site are copyrighted ©.