2011-03-31 15:56:05

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்ச்சியைக் காண வரும் மக்களை வரவேற்க உரோம் தயார்


மார்ச் 31,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மே மாதம் முதல் தேதியன்று முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும் புனித நிகழ்ச்சியைக் காண வரும் அனைத்து மக்களையும் வரவேற்க உரோமை மாநகரம் தயாராக உள்ளதென இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் கூறினர்.
இந்த நிகழ்வுக்கு வருகை தரும் பல்லாயிரம் மக்களைச் சமாளிக்க முடியாமல் உரோமையில் பதட்டநிலைகள் உருவாகலாம் என்று கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஏற்பாடு குழுவினரின் சார்பில் இச்செவ்வாயன்று பேசிய பேரருள் தந்தை Liberio Andreatta செய்தியாளர்களிடம் கூறினார்.
ஏப்ரல் 30 சனிக்கிழமை Circus Maximus என்ற உரோமைத் திடலில் நடைபெறும் திருவிழிப்புச் சடங்கு, மே மாதம் முதல் தேதி புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தையால் நிகழ்த்தப்படும் திருப்பலி, மற்றும் மே 2ம் தேதி திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்தோனே தலைமையில் நடைபெறும் நன்றியறிதல் திருப்பலி ஆகிய மூன்று நிகழ்வுகளுக்கும் நுழைவுச் சீட்டு எதுவும் கிடையாது என்று அருள்தந்தை Andreatta விளக்கினார்.
இந்நிகழ்வையொட்டி, திருப்பயணிகளுக்கான அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவரும் ஏப்ரல் 30, மே 1, மே 2 ஆகிய மூன்று நாட்கள் பொது வாகனங்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.இம்மூன்று நாட்களிலும் உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளனவென்றும் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.