2011-03-31 15:54:38

ஏப்ரல் 01 வாழ்ந்தவர் வழியில்.....


வில்லியம் ஹார்வி இங்கிலாந்தில் 1578ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாந்தேதி பிறந்தார். இவர் தமது பதினைந்தாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் பயின்ற பின்பு இத்தாலியிலுள்ள பாதுவா பல்கலைக்கழகத்திற்குச் சென்று பயின்றார். அதே பல்கலைகழகத்திலேயே பேராசிரியராகவும் ஆனார். வில்லியம் ஹார்வி முதலாம் சார்லஸ் மன்னரின் அபிமானத்துக்குரிய மருத்துவராகப் பணியாற்றினார். இதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும்போது இரண்டு அவுன்ஸ் இரத்தம் வெளியேற்றப்படுவதையும் நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடிப்பதையும் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐந்நூறு காலன் இரத்தம் அதன் வழியாகச் செல்வதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்தார். இதயத்திலிருந்து இரத்தம் தமனிகளின் மூலமாக வெளிச்சென்று சிரைகளின் மூலமாய் அது மீண்டும் இதயத்தை அடைகிறது என்பதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்து உலகிற்குச் சொன்னார். இவர் 1657ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தனது 79வது வயதில் காலமானார்.
உலகில் ஒவ்வோர் இரண்டு நிமிடத்திற்கும் யாராவது சிலருக்கு இரத்தம் தேவைப்படுகின்றது. ஆனால் உலகில் எண்ணற்ற அப்பாவி மக்களின் இரத்தம் பயங்கரவாதத் தாக்குதல்களிலும் போர்களிலும் வீணடிக்கப்படுகின்றன. இயேசு தமது குருதியைச் சிந்தி இந்த மனித சமுதாயத்திற்கு மீட்பளித்தார். எனவே இரத்தம் குறித்த விழிப்புணர்வை நம்மில் விரிவுபடுத்துவோம்.
நீண்ட வழியில் சென்றால் வியர்வை வெளிவரும். குறுக்கு வழியில் சென்றால் இரத்தம் வெளிவரும் என்கிறது ஓர் அமெரிக்கப் பழமொழி







All the contents on this site are copyrighted ©.