2011-03-30 13:29:34

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


மார்ச்30,2011. உரோமை மாநகரத்தில் இந்நாட்களில் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக இளையோர் மற்றும் பள்ளிச் சிறாரை அதிகமாகக் காண முடிகின்றது. இந்நகரில் மிதமான குளிருடன் அமைந்துள்ள தற்போதைய வசந்த கால வெப்பநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தவக்காலச் சூழல்களும் மிகுந்து காணப்படுகின்றன. இப்புதன் காலை வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கானப் பல நாடுகளின் பயணிகளுக்குப் புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் புனித அல்போன்சுஸ் லிகோரியார் பற்றி பல மொழிகளில் எடுத்துச் சொன்னார். அன்புச் சகோதர சகோதரிகளே, 18வது நூற்றாண்டில் பேரும் புகழும் பெற்றிருந்த பேச்சாளர், அறிஞர் மற்றும் திருச்சபையின் மறைவல்லுநரான புனித அல்போன்சுஸ் லிகோரியார் பற்றி இன்றைய நமது மறைப் போதகத்தில் பார்ப்போம் எனத் தமது சிறிய உரையை ஆங்கிலத்தில் தொடங்கினார்.
RealAudioMP3 அல்போன்சுஸ் அருட்பணியாளராக ஆவதற்காகத் தனது திறமையான வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டார். அவரது சொந்த ஊரான நேப்பிள்ஸ் நகரில் திருச்சபையின் புதுப்பித்தலுக்கு மாபெரும் பங்காற்றினார். நகர ஏழைகள் மத்தியில் ஒரு மறைப்பணியாளராகத் தனது பணியைத் தொடங்கிய அவர், செபம் செய்யவும் விசுவாசத்தைப் போதிக்கவுமெனச் சிறு குழுக்களாக மக்களைக் கூட்டினார். தனது மேய்ப்புப்பணியை விரிவுபடுத்தி, “Redemptorists” என்று அழைக்கப்படும் “நமது இரட்சகர்” சபையைத் தொடங்கினார். ஊர் ஊராகச் செல்லும் மறைபோதகக் குழுக்களாக இச்சபையை நிறுவினார். அல்போன்சுடைய மேய்ப்புப்பணி ஆர்வம் அவரது நன்னெறிப் போதனைகளிலும் வெளிப்பட்டது. இவர் தமது இந்த அறநெறிப் போதனைகளில் இறைவனின் இரக்கத்தையும் கடவுளின் சட்டத்திற்கும் நமது ஆழமான மனிதத் தேவைகள், ஏக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான உறவையும் வலியுறுத்தின. ஆழமான கிறிஸ்துயியல் மற்றும் மரியா பக்தியை வெளிப்படுத்தும் இவரது பல ஆன்மீக எழுத்துக்கள் செபத்தை, சிறப்பாக, திருநற்கருணை முன்பாகச் செபிக்கும் பழக்கத்தை வலியுறுத்தின. அறநெறி இறையியலாளரின் பாதுகாவலராகவும் போற்றப்படும் மாபெரும் திருச்சபையின் மறைவல்லுநரான இப்புனிதர், தூய்மையான வாழ்வில் நாம் வளருவதற்கு கடவுள் விடுக்கும் அழைப்பை இன்னும் அதிகமாகவும் முழுமையாகவும் நாம் பதில் சொல்வதற்கு உதவுவாராக. அருட்பணியாளர்கள் துறவிகள் மற்றும் பொதுநிலையினர் புதிய நற்செய்திப்பணிக்கு உறுதியுடன் தங்களை அர்ப்பணிக்கத் தூண்டுகோலாய் இருப்பாராக.
RealAudioMP3 இவ்வாறு தமது புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் மக்கள் படும் கடும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளைக் குறிப்பிட்டார். அந்நாட்டில் இடம் பெறும் வன்முறையில தங்களது அன்புறவுகளை இழந்து துன்புறும் மக்களுடன் ஆன்மீகரீதியில் தான் மிக நெருக்கமாக இருப்பதாக உறுதி கூறினார். அந்நாட்டில் அமைதியான நல்லிணக்க வாழ்வு இடம் பெறுவதற்கும் பொதுமக்களின் நலனுக்காகவும் திட்டவட்டமான உரையாடலைத் தொடங்குமாறும் கேட்டுக் கொண்டார். ஐவரி கோஸ்டில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அகிலத் திருச்சபையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து ஒப்புரவையும் அமைதியையும் ஊக்குவிப்பதற்காக, திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் கோடோவை அந்நாட்டிற்குத் தமது சார்பாக அனுப்பத் தீர்மானித்திருப்பதாகவும் அறிவித்தார். பின்னர் அனைத்துத் திருப்பயணிகளையும் வாழ்த்தித் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.