2011-03-30 15:33:21

டிவைன் தியான மையத்திற்குச் சாதகமாக உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு


மார்ச் 30,2011. கேரளாவில் புகழ்பெற்ற Divine Retreat Centre குறித்து இந்தியாவின் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கத்தோலிக்கர்களும் இந்துக்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
டிவைன் தியான மையத்தைக் குறித்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் எந்தவித ஆதாரங்களும் இல்லாததால், காவல் துறையினர் இம்மையத்தைக் குறித்து மேற்கொண்டுள்ள அனைத்து விசாரணைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென உச்ச நீதி மன்றம் இப்புதனன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவின் Muringoorல் புனித வின்சென்ட் துறவறச் சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தியான மையத்தில் ஒவ்வொரு வாரமும் 12000க்கும் அதிகமானோர் பல்வேறு மொழிகளில் தியானங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மையம் தியானங்கள் மட்டுமின்றி, AIDS நோயுற்றவர்களுக்கான மையம் உட்பட இன்னும் பிற சமூகச்சேவை மையங்களையும் நடத்தி வருகிறது.
கடந்த சில ஆண்டுகள் இம்மையத்தைக் குறித்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அவ்வழக்குகளில் எந்த வித ஆதாரங்களும் இல்லாததால், அவற்றை முற்றிலும் நீக்கி உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த மையத்தின் வளர்ச்சியை விரும்பாத சிலர் மேற்கொண்ட இந்த அவதூறு நடவடிக்கைகள் உலகெங்கும் இந்த மையத்தைக் குறித்து மதிப்பு கொண்டுள்ள பலருக்கு வேதனையைத் தந்துள்ளதென்றும், கடந்த சில ஆண்டுகள் இந்த மையத்தினர் அனுபவித்த வேதனைக்கு இறைவன் தகுந்த பதில் தந்துள்ளார் என்றும் இம்மையத்தின் இயக்குனர் அருள்தந்தை ஜார்ஜ் பனக்கல் (George Panackal) கூறினார்.








All the contents on this site are copyrighted ©.