2011-03-29 15:43:21

மார்ச் 30, வாழந்தவர் வழியில்...


ஹேலியின் வால்விண்மீன் (Halley's Comet), 75 அல்லது 76 ஆண்டுகளுக்கொரு முறை பூமியை நெருங்கி வரும் ஒரு விண்மீன். ஒவ்வோர் நூற்றாண்டிலும் வானில் பல வால்விண்மீன்கள் தோன்றி மறைந்தாலும், ஹேலி சாதாரண கண்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடியதாகும். இவ்வால்விண்மீன் இறுதி முறையாக பெப்ரவரி 9, 1986ல் வந்து போனது. அடுத்த முறை இது 2061ம் ஆண்டின் நடுப்பகுதியில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் வானியல் ஆய்வாளர் எட்மண்ட் ஹேலி 1337 முதல் 1698 வரை தோன்றிய வால்மீன்களின் அட்டவணையைத் தயாரித்து, 1682ல் தோன்றிய வால்மீனே 76 ஆண்டுகளுக்குப் பின் 1758ல் மீண்டும் தோன்றும் எனக் கூறினார். அதன் படி இவ்வால்மீன் டிசம்பர் 25, 1758ல் ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வால்விண்மீன் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட ஹெலியின் பெயர் இந்த வால் விண்மீனுக்கு சூட்டப்பட்டது.

இந்த வால்விண்மீன் புகழ்பெற்றதற்கு ஒரு காரணம் அமெரிக்க எழுத்தாளர் Mark Twain. 1835ம் ஆண்டு ஹேலியின் வால்விண்மீன் தோன்றியபோது, பிறந்தவர் Mark Twain. 1910ம் ஆண்டு அது மீண்டும் தோன்றும்போது, தான் இவ்வுலகை விட்டுச் செல்ல விழைவதாக அவர் கூறினார். அதேபோல், அவர் 1910ம் ஆண்டு காலமானார். அதே 1910ம் ஆண்டு இவ்வால்விண்மீனைப் பற்றி மகாகவி பாரதியார் எழுதிய வரிகள் இவை:

ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையு மென்கின்றார்; மெய்யோ,பொய்யோ?
கீழ்த்திசை ஞானிகளை இயேசு பிறந்த இடமான பெத்லகேமுக்கு அழைத்துச் சென்றது ஹேலியின் வால்விண்மீன் என்று ஒரு சில அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்வால்விண்மீன் கி.மு. 240ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் முதன் முறையாகப் பதிவு செய்யப்பட்டதென வரலாறு சொல்கிறது.







All the contents on this site are copyrighted ©.