2011-03-28 16:43:53

லிபியாவில் மோதல்கள் நிறுத்தப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு திருத்தந்தை அழைப்பு


மார்ச்28,2011. லிபியாவில் இடம் பெறும் ஆயுதம் தாங்கிய மோதல்கள் நிறுத்தப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு மிக உருக்கமாக விண்ணப்பித்தார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இவ்வாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
ஆயுதம் தாங்கிய மோதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, அப்பாவி பொது மக்களின் பாதுகாப்பும் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகின்றது. இத்தகைய அதிகப் பதட்டம் நிறைந்த ஒரு சூழலில், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குத் தூதரக ரீதியாக எடுக்க்க்கூடிய அனைத்து வழிகளையும் கையாளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
லிபியாவிலும் வட ஆப்ரிக்கா முழுவதிலும் அமைதி திரும்பட்டும் என்று செபித்தார். அத்துடன், மத்திய கிழக்குப் பகுதியிலும் இடம் பெற்ற அண்மை வன்முறைகள் பற்றிக் குறிப்பிட்டு “நீதியும் சகோதரத்துவ நல்லிணக்க வாழ்வையும்” தேடும் முயற்சியில் “உரையாடல் மற்றும் ஒப்புரவுக்கான” வழிகளைக் கைக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.
லிபியாவை கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் Moammar Ghadafi க்குப் பிரமாணிக்கமாக இருக்கும் படைகளுக்கும் பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளின் ஆதரவு கொண்ட லிபியப் புரட்சிப் படைகளுக்கும் இடையே கடும் தாக்குதல்கள் இடம் பெற்று வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.