2011-03-28 16:43:24

திருத்தந்தை : மனிதனின் தாகத்தைத் தணிப்பதற்காகக் கடவுள் இயேசுவை இவ்வுலகுக்கு அனுப்பினார்


மார்ச்28,2011. கடவுளின் எல்லா வல்லமையும் நிறைந்த அன்பு ஒவ்வொரு மனிதனின் சுதந்திரத்தை மதிக்கின்றது, எனவே அது மனிதனின் இதயத்தைத் தொடுகிறது மற்றும் அவனின் பதிலுக்காகப் பொறுமையோடு காத்திருக்கிறது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, தந்தையாம் கடவுள் தமது அன்பை நமக்கு வழங்கி, நித்திய வாழ்வுக்கான மனிதனின் தாகத்தைத் தணிப்பதற்காக கிறிஸ்து இயேசுவை இவ்வுலகுக்கு அனுப்பினார் என்றார்.
கிணற்றருகில் இயேசு சமாரியப் பெண்ணோடு உரையாடிய நற்செயதிப் பகுதியை மையமாகக் கொண்டு உரையாற்றிய திருத்தந்தை, இயேசுவின் களைப்பு அவரின் உண்மையான மனிதப் பண்பின் அடைாளமாக இருக்கின்றது, இது அவரது திருப்பாடுகளுக்கு முன்னோட்டமாகவும் இருக்கின்றது என்றார்.
தாகமும் களைப்பும் உடல்ரீதியானதாக இருக்கின்ற போதிலும் இயேசு அந்தப் பெண்ணின் விசுவாசம் மற்றும் அனைத்து மனித சமுதாயத்தின் விசுவாசத்திற்காகத் தாகம் கொண்டிருந்தார் என்று திருத்தந்தை விளக்கினார்.
நாம் ஒவ்வொருவருமே சமாரியப் பெண்ணின் இடத்தில் வைத்து நம்மை நோக்கலாம் என்றும், இயேசு நமக்காகக் காத்திருக்கிறார், குறிப்பாக இத்தவக்காலத்தில் நம்மோடு பேசக் காத்திருக்கிறார், ஆதலால் நமது அறையிலோ அல்லது ஆலயத்திலோ அல்லது தனிமையான இடத்திலோ அமைதியில் நேரம் செலவழிப்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.