2011-03-26 15:27:50

பான் கி மூன் : அணுக்கதிர்வீச்சு குறித்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் எடுக்கப்பட வேண்டும்


மார்ச்26,2011: ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஃபுக்குஷிமா அணுமின்நிலையம் சேதமாகியிருக்கும் வேளை, உலகில் மக்கள் அணுக்கதிர்வீச்சுக்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்குச் சர்வதேச அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு பான் கி மூன் கேட்டுள்ளார்.
அணுக்கதிர்வீச்சு அவசரகால நிர்வாக அமைப்பு உள்ளிட்ட ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி நிறுவனங்கள் மறு பரிசீலனை செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பான் கி மூன் கூறினார்.
இதற்கிடையே, ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள கடலில் அயோடின் அணுக்கதிர்வீச்சின் அளவு பாதுகாப்பு வரையறையைவிட 1,250 மடங்கு அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தின் 3ம் உலையில் மிகவும் மோசமாக சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த 3ம் உலையில்தான், யுரேனியத்தோடு புளுட்டோனியமும் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியத்தைவிட புளுட்டோனியம் மிகுந்த நச்சுத்தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
3ம் உலையில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு கலந்த நீரைப் பரிசோதித்ததில், அதில் இயல்பைவிட 10 ஆயிரம் மடங்கு அதிகமாகக் கதிர்வீச்சு கலந்திருப்பது தெரியவந்தது.
மேலும் ஜப்பானில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டி விட்டது என்றும் 17,440 பேர் காணாமற்போயுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.