2011-03-26 15:18:34

திருத்தந்தை : கடவுள் பற்றிய கேள்வி சமுதாயத்துக்கு அச்சுறுத்தும் செய்தியாக இல்லை


மார்ச்26,2011: கடவுள் பற்றிய கேள்வி சமுதாயத்துக்கு அச்சுறுத்தும் செய்தியாக இல்லை, இந்தக் கேள்வி உண்மையான மனித வாழ்க்கையை அச்சுறுத்தவில்லை, கடவுள் பற்றிய கேள்வி நாம் வாழும் இக்காலத்திய மற்ற பெரிய கேள்விகளில் இல்லாமல் இருக்கக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீடக் கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசியும் (Gianfranco Ravasi) பாரிஸ் உயர் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் ஆந்த்ரு வாங் த்ருவாவும் (André Vingt-Trois) இணைந்து நடத்திய “Courts of the Gentiles” என்ற சர்வதேசக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் இவ்வெள்ளி மாலை ஒலி-ஒளிக் காட்சி மூலம் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
அக்காலத்தில் இஸ்ரயேல் மக்களின் மதத்தைச் சேராதவர்கள் எருசலேம் ஆலயத்துக்கு அருகிலுள்ள இடத்துக்கு வந்து மதத்தைப் பற்றிக் கேள்வி கேட்டனர். சதுசேயர்களைச் சந்தித்து விசுவாசம் பற்றிப் பேசி அறியப்படாத கடவுளிடமும் செபித்தனர். இந்த மக்கள் கூடிய இடம் புறவினத்தாரின் கூடம் “Courts of the Gentiles” என்று அழைக்கப்பட்டது.
இன்று கத்தோலிக்கத் திருச்சபைக்குள் “Courts of the Gentiles” என்ற பெயரில் அமைப்புக்களை உருவாக்கி கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்துமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டதன் பேரில் இத்தகைய கூட்டங்கள் தற்போது பல இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பாரிஸ் கூட்டத்தில் டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுத் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருமளவான இளையோர் உட்பட பலர் கலந்து கொண்ட இக்கூட்டப் பிரதிநிதிகளிடம் வீடியோ செய்தி மூலம் பேசிய திருத்தந்தை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் விசுவாசத்திற்குச் சவால் விடுக்க வேண்டும், அதேசமயம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தாங்கள் பொதிந்து வைத்துள்ள உறுதியான விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த உலகை நாம் சமைக்க விரும்பினால், விசுவாசிகளும் விசுவாசமற்றவர்களும் தனியாட்களாகவும் குழுவாகவும் தங்களது உறுதிப்பாடுகளுக்கு ஒத்தவகையில் வாழ்வதற்குத் தங்களது உரிமைகளில் நீதியும் சமத்துவமும் பெற்றிருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்தக் கோடைகாலத்தில் மத்ரித்தில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்தில் பங்கு கொள்ளவும் இளையோருக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.