2011-03-24 14:21:19

மார்ச் 25 - வாழ்ந்தவர் வழியில்.....


நார்மன் எர்னஸ்ட் போர்லாக் (Norman Ernest Borlaug) என்பவர், ஓர் அமெரிக்க வேளாண் அறிவியலாளர், மனிதத்துவவாதி மற்றும் நொபெல் அமைதி விருது பெற்றவர். இவர் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். அமைதிக்கான நொபெல் விருது, விடுதலைக்கான அமெரிக்கத் தலைவர் பதக்கம் மற்றும் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் மூன்றையும் வென்ற ஆறு பேரில் ஒருவர் போர்லாக். இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் பெற்றவர். அவரது கண்டுபிடிப்புகள் மூலம் உலகில் நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் பசியின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. நார்மன் ஏர்னெஸ்ட் போர்லாக், 1914ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி பிறந்து 2009ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி காலமானார். இவரது மூதாதையர் நார்வே நாட்டைச் சேர்ந்தவர்கள்.
போர்லாக், Minnesota பல்கலைகழகத்தில் செடிகளில் நோய் மற்றும் மரபணு இயலில் ஆய்வு செய்து 1942ம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றவர். மெக்சிகோவில் வேளாண்துறையில் ஆராய்ச்சி செய்து கோதுமைப் பயிரைத் தாக்கும் நோய்களைத் தடுக்கும் வழிகள், அதிகப்படியான விளைச்சல் போன்றவற்றுக்கு உதவினார். மெக்சிகோ, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் வேளாண்மையில் நவீன தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க உதவினார். இதன் பயனாக மெக்சிகோ கோதுமை ஏற்றுமதியில் 1963ல் முதன்மை இடத்தைப் பெற்றது. 1965க்கும் 1970க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் கோதுமை விளைச்சல் ஏறக்குறைய இரண்டு மடங்கானது. பின்னர் ஆசியாவின் பிற நாடுகளிலும் ஆப்ரிக்காவிலும் உணவு உற்பத்தி பெருகுவதற்கு உதவியிருக்கிறார் நார்மன் ஏர்னெஸ்ட் போர்லாக்.







All the contents on this site are copyrighted ©.