2011-03-24 14:23:57

கால்களால் விமானத்தை இயக்கும் 28 வயது பெண் திருத்தந்தையுடன் சந்திப்பு


மார்ச் 24,2011. உலகில் வேறு யாரும் மேற்கொள்ளாத ஒரு முயற்சியாக, தனது இரு கால்களாலும் விமானத்தை இயக்கும் விமான ஓட்டுனரான Jessica Cox என்ற 28 வயது பெண் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டை இப்புதன் பொது மறைப்போதகத்திற்குப் பிறகு சந்தித்தார்.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த Jessica பிறக்கும்போதே இரு கைகளும் இல்லாமல் பிறந்தவர். எனினும் அவர் தன் விடாமுயற்சியால் விமான ஓட்டுனர் பயிற்சியில் இணைந்து, உலகிலேயே கால்களால் விமானத்தை ஓட்டும் ஒரே ஓட்டுனராக விளங்குகிறார். மேலும், அமெரிக்காவின் Tae Kwon-Do கலையில் கறுப்புப் பட்டையும் இவர் பெற்றுள்ளார்.
இப்புதன் பொது மறைபோதகத்திற்குப் பின் திருத்தந்தையைச் சந்தித்து, தன் கால்களால் அவருக்கு ஒரு பதக்கத்தை அளிக்க, திருத்தந்தையும் அதை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்.
எந்த நிலையிலும் ஒருவரால் வாழ முடியும் என்பதற்கு தான் சான்றாக விளங்குவதாகவும், இந்த நம்பிக்கையை இளையோர் மத்தியில் வளர்ப்பதே தன் வாழ்வின் குறிக்கோள் என்றும் இவ்வீரப் பெண்மணி வத்திக்கான் நாளிதழான L'Osservatore Romanoவுக்கு இப்புதனன்று அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதி, அண்மையில் வெளியான "நாசரேத் இயேசு" என்ற புத்தகம் இவ்வியாழனன்று உரோமையில் திருத்தந்தையின் பேராலயம் என்று வழங்கப்படும் புனித ஜான் லாத்தரன் பசிலிக்கா பேராலயத்திற்கு வழங்கப்படும்.
உரோமைய பெருமறைமாவட்டத்தின் பிரதிநிதியான கர்தினால் Agostino Vallini, ஜெர்மனியின் Regensburg மறைமாவட்டத்தின் ஆயர் Gerhard Ludwig Muller ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.