2011-03-24 14:26:54

கத்தோலிக்க அறிஞர்கள் : ஜப்பான் அணு உலைவெடிப்பு அணு சக்தியைப் பயன்படுத்தும் நன்னெறி தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளlது


மார்ச் 24,2011. ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலைவெடிப்பு மனித நலம், சுற்றுச்சூழல் தொடர்பான கேள்விகளை மட்டும் எழுப்பவில்லை மாறாக, அணு சக்தியைப் பயன்படுத்தும் நன்னெறி தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளன என்று கத்தோலிக்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஜப்பான் இந்த உலகுக்கு அளித்துள்ள இந்த அபாய அறிவிப்பைத் தொடர்ந்து மனித குலம் அணுசக்தியல்லாத பிற சக்திகளைக் குறித்து விரைவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள இலயோலா பல்கலைக் கழகத்தின் நன்னெறி மையத்தின் இயக்குனர் William French கூறினார்.
1979ம் ஆண்டு அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதியில் நடந்த விபத்து, 1986ல் செர்னோபிலில் ஏற்பட்ட விபத்து இவைகளையும் சுட்டிக் காட்டிப் பேசிய வில்லியம் பிரெஞ்ச், அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துக்களை இன்னும் நாம் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
அணுசக்தி பயன்பாடு குறித்து மனித குலம் இன்னும் தீர ஆராயும் கடமைப்பட்டுள்ளது என்று வாஷிங்க்டன் நகரில் உள்ள Georgetown பல்கலைக் கழகத்தின் Woodstock இறையியல் மையத்தின் பேராசிரியர் இயேசு சபை குரு Thomas Reese கூறினார்.
மின் சக்தி, மற்றும் பிற சக்திகளைப் பயன்படுத்தும் சாதனங்களை மனித குலம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், நாம் பல்வேறு சக்திகளைக் கண்டுபிடிக்கும் நிர்ப்பந்தம் எழுகிறது என்றும், நமது சக்தி தேவைகளைக் குறைப்பதற்கு முயல வேண்டும் என்றும் North Texas பல்கலைக் கழகத்தின் மெய்யியல் பேராசிரியர் Adam Briggle கூறினார்.
ஜப்பான் அணு உலை விபத்துக்களை அடுத்து, சுவிட்சர்லாந்து அணு உலைகள் கட்டும் அனைத்துத் திட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் அணு உலை திட்டங்களை மறு பரிசிலீனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளன.
இருந்தாலும், Chile போன்ற சில நாடுகள் இன்னும் அணு உலை திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன என்று செய்தி குறிப்பொன்று கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.