2011-03-23 15:50:23

மார்ச் 24 வாழ்ந்தவர் வழியில்….


“இவ்வுலகில் அடக்குமுறையை அனுபவிக்காத, அதேசமயம், இவ்வுலகின் சலுகைகளையும் இவ்வுலகப் பொருட்களின் ஆதரவையும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் திருச்சபை இயேசு கிறிஸ்துவின் உண்மையானத் திருச்சபையாக இருக்க முடியாது”
“பாவத்தைச் சுட்டிக் காட்டாத போதனை உண்மையான நற்செய்தியின் போதனையாக இருக்காது”
“அநீதிகளால், செல்வந்தர்-ஏழைகள் இவர்களுக்கிடையே பெரும் இடைவெளிகளால், செல்வாக்குமிக்க சிலரின் தாக்கத்தால், ஏழைகளின், சமூக வன்முறைகளின் அதிகரிப்பால் இந்த நமது உலகம் கலவரப்பட்டு இருக்கின்றது. இவை பாவத்தின் பிணைப்பாகும். நான் இவ்வாறெல்லாம் சொல்வது பலருக்கு எரிச்சலை உண்டு பண்ணலாம். நான் நற்செய்தியைப் போதிப்பதை விட்டு அரசியலில் தலையிடுவது போல் தோன்றலாம். ஆயினும் பாலைவனத்தில் ஒலிக்கும் குரலாக நான் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பேன்”.
இவை போன்ற இன்னும் பல கூற்றுக்களைச் சொல்லியிருப்பவர் மறைசாட்சி பேராயர் ஆஸ்கர் ரொமேரோ. ஏழைகளின் ஆயர் என அழைக்கப்படும் இவர் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோர் நாட்டு சான் சால்வதோர் பேராயராகப் பணியாற்றியவர். சால்வதோர் கடும் அரசியல் நெருக்கடிகளை எதிர்நோக்கிய காலக் கட்டத்தில் மனித உரிமைகளும் சமூக நீதியும் பாதுகாக்கப்பட வேண்டுமென்று அஞ்சாமல் பொதுப்படையாகக் குரல் எழுப்பி வந்தவர். அந்நாட்டில் வெகு சிலர் பெருமளவான செல்வத்தை அனுபவித்துப் பெரும்பான்மை மக்கள் கடும் ஏழ்மையில் வாடியது கண்டு அரசை வெளிப்படையாய்ச் சாடி வந்தவர். இதனால் அப்போதைய வலது சாரி அரசு இவர்மேல் வெகுண்டெழுந்தது. 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த போது வலதுசாரி துப்பாக்கி மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்றாவது ஒருநாள் நிச்சயமாகத் தான் கொல்லப்படுவதை உணர்ந்திருந்த பேராயர் ரொமேரோ, “உயிர்ப்பு இல்லாத இறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை, அவர்கள் என்னைக் கொன்றால் நான் சால்வதோர் மக்களில் உயிர்த்தெழுவேன்” என்று சொல்லியிருந்தார். பேராயர் ஆஸ்கர் ரொமேரோ இன்று சால்வதோர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலகினர் அனைவர் இதயத்திலும் ஏழைகளின் ஆயராக, மனித உரிமை ஆர்வலராக, மறைசாட்சியாகப் புனிதராக இடம் பெற்றிருக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.