2011-03-23 16:02:34

குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் பேராயரின் வன்மையான கண்டனம்


மார்ச் 23,2011. அண்மையில் அமெரிக்காவில் குர்ஆன் எரிக்கப்பட்ட நிகழ்ச்சிக்குத் தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்.
இந்தக் கொடுஞ்செயல் உச்சக்கட்ட மடமை என்றும், எந்த வகையிலும் இது கிறிஸ்தவ எண்ணங்களையோ, மதிப்பீடுகளையோ திருச்சபையின் படிப்பினைகளையோ வெளிப்படுத்தவில்லை என்றும் பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் இலாரன்ஸ் ஜான் சல்தானா கூறினார்.
இச்செவ்வாயன்று துவங்கிய பாகிஸ்தான் பாராளுமன்றக் கூட்டத்தின் ஆரம்பத்தில் பேசிய பாகிஸ்தான் அரசுத் தலைவரான ஆசிப் அலி சர்தாரி இதனை வன்மையாகக் கண்டித்தார்.
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியக் குழுக்கள் இவ்வெள்ளியன்று இச்செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.
இந்த வன்செயலைக் கண்டித்து கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் இஸ்லாமிய சகோதரர்களுடன் கிறிஸ்தவர்களும் இணைய வேண்டும் என்றும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நல்லுறவை வளர்க்க வேண்டுமேயொழிய பகைமையை மேலும் தூண்டும் செயல்களில் ஈடுபடக் கூடாதென்றும் பேராயர் மக்களிடம் விண்ணப்பித்துள்ளார்.கண்டனத்திற்குரிய இச்செயலைத் தீர விசாரிக்க அமெரிக்க அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் பேராயர் சல்தானா தன் அறிக்கையில் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.