2011-03-22 16:03:36

விவிலியத்
தேடல்


RealAudioMP3
நாம் அனைவரும் வாழ்வின் பல நேரங்களில் அடைந்துள்ள ஓர் அனுபவத்துடன் இன்றைய விவிலியத் தேடலை ஆரம்பிப்போம். ஒவ்வொரு நாளும் மாலையில் அன்றைய வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறோம். அங்கு வந்ததும் என்ன நடக்கிறது? காலணிகளைக் கழற்றிவிட்டு, உடையை மாற்றி, எளிதான உடைகளை அணிந்துகொண்டு, ஒரு சாய்வு நாற்காலியில், அல்லது ஒரு பாயில் அமர்ந்து ஒரு செம்பு தண்ணீரைக் குடித்திருக்கிறோம். அல்லது அம்மா சுடச்சுடக் கொண்டுவந்து தரும் காபியைக் குடித்திருக்கிறோம். அந்த நேரத்தில் நாம் அடையும் ஒரு நிறைவு, மகிழ்வு தனிப்பட்ட ஒன்று. இந்த நிறைவை, மகிழ்வைத் தரும் இடத்தைத்தான் நாம் இல்லம் என்கிறோம்.
இந்த ஓர் உணர்வுடன் இன்றைய நம் தேடலை ஆரம்பிப்பதற்கு காரணம் உண்டு. இன்று நம் தேடலில் திருப்பாடல் 23ன் இறுதி வரியைச் சிந்திக்க வந்திருக்கிறோம். "நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்" என்பன இத்திருப்பாடலின் இறுதி வார்த்தைகள். ஒரு சில மொழிபெயர்ப்புகளில் ‘நெடுநாள்’ என்பதற்குப் பதில், 'என்றென்றும்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. "நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்." என்ற வார்த்தைகள் தரும் பாதுகாப்பான உணர்வுடன் நம் தேடலை இன்று ஆரம்பிக்கிறோம்.

அரிஸ்டாட்டில், ஷேக்ஸ்பியர் காலம் துவங்கி, நம் காலம் வரை இலக்கிய வழக்கின்படி எழுதப்பட்டுள்ள பெரும்பாலான நாடகங்கள் மூன்று அங்கங்கள் கொண்டவை. முதல் அங்கம் கதை உருவாகும் களத்தை விவரிக்கும். இங்கு எல்லாம் சுமுகமாக, அமைதியாக நடைபெறும்.
இந்தச் சுமுகமானச் சூழலில் பிரச்சனை உருவாகும். அந்தப் பிரச்சனை பல வடிவங்கள் பெற்று, வலுவடைந்து, கதையில் உள்ள அனைவரையும் பாதிக்கும். கதையின் நாயகன் இந்தப் பிரச்சனைகளுடன் மோதி, அவற்றைத் தீர்க்க முயல்வார். இது இரண்டாம் அங்கம்.
நாயகனின் முயற்சிகள், மற்றவர்களது உதவிகள், கடவுளின் அருள் என்று பல அம்சங்கள் இணைந்து, பிரச்சனை தீர்க்கப்படும். நன்மையின் பக்கம் இருந்த அனைவரும் மகிழ்வில் நிறைவர். கதை முடியும். இது மூன்றாவது அங்கம்.

இந்த இலக்கிய வழக்கைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு கவிதையாக திருப்பாடல் 23ஐ நாம் காணலாம். இதன் முதல் அங்கத்தில் பசுமைப் புல்வெளி, அமைதியான நீர்நிலை, தேவையான உணவு, ஒய்வு எல்லாவற்றையும் அனுபவிக்கும் ஓர் ஆடாகத் தன்னை வர்ணித்தார் அதன் ஆசிரியர்.
இந்தச் சுமுகமானச் சூழலில் இருள், சாவு, எதிரிகள் என்று பிரச்சனைகள் எழுந்தன. பிரச்சனைகள் தன்னைச் சூழ்ந்தபோது, தன்னுடன் ஆயனாம் ஆண்டவனும் இருந்தார் என்பதையும் ஆசிரியர் உணர்ந்தார். இது இரண்டாம் அங்கம்.
ஆயன் உடனிருக்கிறார் என்ற அந்த நம்பிக்கையில் திருப்பாடலின் ஆசிரியர் இருளும் சாவும் நிறைந்த பள்ளத்தாக்கைக் கடந்து வெளியேறினார். அவரைப் புடைசூழ்ந்து வந்த அருள் நலமும், பேரன்பும் அவரை இறைவனின் இல்லத்திற்கு வந்து சேர்த்துள்ளன என்று மூன்றாம் பகுதியில் கூறியுள்ளார்.

"நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்." என்ற இந்த வரியில் முதலில் நம் கவனத்தை "ஆண்டவரின் இல்லம்" என்ற வார்த்தைகள் ஈர்க்கின்றன. நாம் குடும்பமாய் வாழுமிடத்தைக் குறிக்க ஆங்கிலத்தில் இரு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். House மற்றும் Home. தமிழில் இதை வீடு அல்லது இல்லம் என்று சொல்லலாம்.
கல், மண், சிமென்ட், கம்பிகள் என்று பல பொருட்களைக் கொண்டு கட்டப்படும் கட்டிடத்தை House, வீடு அல்லது மாளிகை என்று சொல்கிறோம். ஓர் இல்லம் உருவாக பொருட்கள் தேவையில்லை மனங்கள் தேவை. மனங்கள் ஒன்றி உருவாகும் ஓர் அமைப்பையே நாம் Home அல்லது இல்லம் என்று சொல்கிறோம்.

“A house is made of walls and beams; a home is built with love and dreams.”
கற்களால் கம்பிகளால் கட்டப்படுவது வீடு.
கனவால், கனிவால் உருவாக்கப்படுவது இல்லம். - Christian Morganstern

“Home is something you somehow don’t have to deserve.”
இதை அடைய நாம் தகுதி உள்ளவர்கள்தானா என்ற கவலையைச் சிறிதும் உருவாக்காத ஓர் இடமே நமது இல்லம்.
Robert Frost

இல்லம் என்ற வார்த்தையைக் கேட்டதும் நம் மனதில் தோன்றும் ஓர் எண்ணம் பாதுகாப்பு. இந்தப் பாதுகாப்பை நான்கு சுவர்களோ, தலைக்கு மேல் உள்ள கூரையோ தருவதில்லை. நம்மைச் சூழ்ந்திருக்கும் இதயங்கள் தரும் பாதுகாப்பே நாம் இல்லத்தில் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும். 'ஆண்டவரின் இல்லத்'தைக் குறித்து திருப்பாடல் ஆசரியர் வேறொரு திருப்பாடலில் கூறியுள்ள அழகிய வரிகளும் நமக்குப் பழக்கமான வரிகள்தாம்:

திருப்பாடல்கள் 27 4
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்: அதையே நான் நாடித் தேடுவேன்: ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்: அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.

இந்த வரிகளில் ஆசிரியர் கூறும் 'ஆண்டவனின் இல்லம்' வெறும் கட்டிடம் அல்ல. கடவுளின் அருகாமை, அதனால் கிடைக்கும் கடவுளின் முக தரிசனம், கடவுளின் வழிநடத்தும் பரிவு ஆகியவை இருப்பதாலேயே அந்த இல்லத்தில் தான் நெடுநாள் வாழ விரும்புவதாகக் கூறுகிறார் ஆசிரியர். கடவுள் இல்லாத வெறும் கட்டிடம் பெரிய அரண்மனையாய் இருந்தாலும் அதில் தங்க விரும்பவில்லை என்பதையும் வேறொரு திருப்பாடலில் கூறியுள்ளார்.

திருப்பாடல்கள் 84 1, 10
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது: பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது.

இதேயொத்த எண்ணங்களையே இயேசுவும் தன் சீடர்களுக்குக் கூறியுள்ளார்.
யோவான் நற்செய்தி 14 1-3
இயேசு தன் சீடர்களிடம் கூறியது: நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.

தன் தந்தையின் மாளிகையில் பல அறைகள் உண்டு என்று ஆரம்பிக்கும் இயேசு, இறுதியில் அங்கு தன் சீடர்களுடன் தான் இருப்பேன் என்ற உறுதியையும் தருகிறார். அந்த உறுதியாலேயே உறைவிடங்கள் பல உள்ள மாளிகை இல்லமாக மாறுகிறது.

நாணயத்தின் இரு பக்கங்கள் போல், எந்த ஓர் உண்மைக்கும் மறுபக்கமும் இருக்குமல்லவா? அன்பிற்கும் பாதுகாப்பிற்கும் இலக்கணமாய் அமைவது இல்லங்கள் என்று சொல்கிறோம். எல்லா இல்லங்களும், எல்லா நேரங்களிலும் அன்பை, பாதுகாப்பை அளிக்கின்றனவா? என்ற கேள்வியும் எழுகின்றது. இல்லத்தில் வாழ்பவர்கள் இடையே இரகசியங்கள், ஒளிவு மறைவுகள் அதிகமாகும்போது சந்தேகங்கள் என்ற கார்மேகங்களும் திரளும். புயல்கள் உருவாகும். புயல்கள் உருவானபின், அன்பையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டிய இல்லங்கள் சந்தேகச் சிறைகளாக மாறிவிடும்.
ஒரு சிலர் இந்தப் புயல்களுக்கான காரணங்களைத் தங்கள் உள்ளங்களில், உறவுகளில் தேடாமல், தாங்கள் வாழும் வீடுகள் கட்டப்பட்ட முறை சரியில்லை என்று குறை கூறுவதையும் நாம் பார்க்கிறோம். வீட்டை மாற்றினால் எல்லாம் சரியாகி விடும் என்றும் நம்புகின்றோம். வெறும் கல்லாலும் மண்ணாலும் எழுந்த வீட்டை எளிதில் மாற்றி விடலாம். ஆனால், உள்ளங்களை, உறவுகளை அவ்வளவு எளிதில் மாற்ற முடிகிறதா? மனங்கள் மாறாமல், வெறும் வீடு மாற்றம் செய்வதால் இல்லத்தை உருவாக்க முடியாது.
கடவுளின் இல்லம் என்று சொல்லும்போது, அங்கும் ஒரு மறுபக்கம் உண்டு. அந்த இல்லத்தில் வாழும் பக்குவம் நமக்கில்லையென்றால், அந்த வீட்டில் வாழ்வது எளிதல்ல. இறைவனோடு வாழ்வது என்பது அவரது அருகாமை, அவரது தொடர்ந்த பார்வை, கவனிப்பு இவைகளையும் உள்ளடக்கியது. இந்த எண்ணம் நம்மை அமைதியில் ஆழ்த்தலாம், அல்லது சங்கடத்திலும் ஆழ்த்தலாம். கடவுளின் தொடர்ந்த கண்காணிப்பில் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றாலும், அந்தப் பார்வையில் வாழும் பக்குவம் நாம் பெற வேண்டும். “நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்.” என்று திருப்பாடல் ஆசிரியரைப் போல் பெருமையோடு சொல்லும் பக்குவம் பெற இறையருளை வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.