2011-03-21 14:50:52

வாரம் ஓர் அலசல் – “நீரின்றி அமையாது உலகம்


மார்ச்21,2011. ஒரு நாள் ஓர் ஆள் அந்த ஊர் கோவிலுக்குச் சென்று கடவுளே, நீர் எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தால் உமக்கு ஒரு தேங்காய் உடைக்கிறேன் என்று உருக்கமாக வேண்டினார். கடவுளும் அவர்முன் தோன்றி அந்தப் பணத்தைக் கொடுத்து விட்டு மறைந்தார். அட, இவ்வளவு சுலபமா கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா தேங்காய் நேர்த்திக்கடன் பற்றிப் பேரம் பேசியிருக்கவே மாட்டேன். சரி, பரவாயில்லை என்று அலுத்துக் கொண்டே தேங்காய் வாங்கப் போனார். கடையில் ஒரு தேங்காய் ஐந்து ரூபாய் என்று சொன்னதும் அடுத்த ஊர்க் கடைக்குப் போனார். அங்கே ஒரு தேங்காய் மூன்று ரூபாய் என்றார்கள். இதுவும் அதிகம் என்று நினைத்து அந்த ஆற்றங்கரையில் இருந்த தென்னந்தோப்புக்குப் போனார். அந்தத் தோப்புக்காரர் அவரிடம், நீ மரத்தில் ஏறிப் பறித்தால் ஒரு தேங்காய் ஒரு ரூபாய்தான் என்றார். மரம் ஏறிப் பழக்கம் இல்லாவிட்டாலும் காசுக்கு ஆசைப்பட்டு ஏறினார். அந்த மரத்தின் உச்சி அந்த ஆற்றின் நடுவில் வளைந்து நின்றது. இவரும் ஏறி உச்சிக்குப் போனார். அந்த நேரம் பார்த்து பலத்தக் காற்றுடன் மழை பெய்ததால் அவரது கால் சறுக்கி ஒரு மட்டையைப் பிடித்துக் கொண்டு தொங்கினார். கீழே ஆற்றிலோ பெரு வெள்ளம். மடியிலோ ஒரு இலட்சம் ரூபாய். அச்சமயம் பார்த்து ஒரு யானைப் பாகன் யானையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அவரிடம், ஐயா, என் மடியில் இருக்கும் பணத்தில் பத்தாயிரம் உமக்குத் தருகிறேன். அப்படியே மெதுவாக யானையைத் தண்ணீரில் இறக்கி எனக்கு நேராகக் கொண்டு வாரும் என்றார். யானைப் பாகனும் காசுக்கு ஆசைப்பட்டு நீரில் இறங்கினார். ஆனால் யானை நழுவிச் சென்றுவிட்டது. இப்பொழுது இருவரும் ஒருவர் காலை ஒருவர் பிடித்துக் கொண்டு தொங்கினர். பின்னர் அங்கு ஒட்டகத்தைக் குளிப்பாட்ட வந்தவரிடம் இதேபோல் சொல்ல, அவரும் ஆற்றில் இறங்கினார். ஆனால் யானை சென்றது போல் ஒட்டகமும் சென்று விட்டது. இறுதியில் மூவரும் தண்ணீரில் விழுந்து எப்படியோ நீந்திக் கரை சேர்ந்தனர். ஆனால் மடியில் இருந்த அவ்வளவு பணமும் ஆற்றுத் தண்ணீரில் அடித்துக் கொண்டு போய்விட்டது.
ஆசை அறுமின், ஆசை அறுமின் என்பார்கள். ஆனால் ஆசை யாரை விட்டது. இந்த ஆசைதான் இந்நாட்களில் பல நாடுகள் எதிர்நோக்கும் கடும் பிரச்சனைகளுக்குக் காரணமாகியுள்ளது. இந்த ஆசையினால்தான் நாடுவிட்டு நாடு செல்வோரின் எண்ணிக்கையும் நாட்டுக்குள்ளேயே நகரங்களுக்குக் குடிபெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இன்று உலகில் ஒவ்வொரு வினாடிக்கும் இரண்டு பேர் வீதம் நகரங்களில் குடியேறி வருகின்றனர். இன்னும் இருபது ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினர் அதாவது சுமார் 500 கோடிப்பேர் நகரங்களில் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் இருபது இலட்சம் டன்கள் மனிதக் கழிவுகள், தண்ணீர் செல்லும் வழிகளில் வெளியேற்றப்படுகின்றன. உலகின் பெரு நகரங்களைச் சுற்றி அமைந்துள்ள சேரிகளிலும் தற்காலிகக் குடியிருப்புக்களிலும் 82 கோடியே 80 இலட்சம் பேர் வாழ்கின்றனர்.
நகரங்களில் குடியோருவாரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இம்மக்களுக்குப் போதுமான தண்ணீரையும் சுகாதார வசதிகளையும் அமைத்துக் கொடுப்பது இன்று நாடுகள் எதிர்நோக்கும் மிகப் பெரும் சவாலாக இருக்கின்றது. இதனைக் கண்முன் கொண்டு இந்த 2011ம் ஆண்டின் உலக தண்ணீர் தினம், “நகரங்களுக்குத் தண்ணீர் : நகர்ப்புறச் சவாலுக்குப் பதில் அளித்தல்” என்ற தலைப்பில் கடைபிடிக்கப்படுகிறது. 1993ம் ஆண்டிலிருந்து மார்ச் 22ம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இச்செவ்வாயன்று தென்னாப்ரிக்காவின் கேப்டவுனில் இதன் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நாட்டின் பல நகரங்களில் தேசிய தண்ணீர் வார நிகழ்வுகளும் இத்திங்களன்று தொடங்கப்பட்டுள்ளன. இந்த உலக தின நிகழ்வுகள் பற்றிப் பேசிய ஐ.நா.குடியிருப்பு அமைப்புத் தலைவர் Bert Diphoom, வளர்ந்து வரும் நகரங்கள் எதிர்கொள்ளும் சவால்களை விளக்கினார்.
உலகின் நீர்வள ஆதாரங்கள் குறித்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலி-ஒளி குறுந்தகடுகளை டில்லியிலுள்ள யுனெஸ்கோ அலுவலகம் இந்தியாவுக்கெனத் தயாரித்துள்ளது. மேலும், தண்ணீர் மாசுக்கேட்டை அலசும் புத்தகம் ஒன்றையும் யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த உலகத் தண்ணீர் தினத்தையொட்டி செய்திகளை வெளியிட்ட பல அமைப்புக்களின் தலைவர்கள், தண்ணீரும் நலவாழ்வு வசதியும் அடிப்படை மனித உரிமைகள் என்பதால் இவை எந்தப் பாகுபாடும் இன்றி எல்லா மக்களுக்கும் கிடைக்குமாறுச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்கள். மேலும், இந்தப் புவியில் சுமார் 71 விழுக்காட்டுப் பகுதி தண்ணீர். அதிலும் 2.5 விழுக்காடுதான் சுத்தமான தண்ணீர். இதிலும் ஒரு விழுக்காடுதான் சுத்தமான குடி தண்ணீர். இன்று உலகில் ஆறு பேருக்கு ஒருவர் வீதம் குடிநீர் வசதியின்றி இருக்கின்றனர். 2015ம் ஆண்டுக்குள் உலகில் மூன்றில் இரண்டு பகுதியினர் தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்நோக்குவர்.
உலகின் பல பெரிய நகரங்கள், ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 25 கோடி முதல் 50 கோடி வரையிலான கன மீட்டர் குடிநீரை வீணாக்குகின்றன. இந்த நீரைச் சேமித்தால் பெரிய நகரங்களில் மேலும் ஒரு கோடி முதல் 2 கோடிப் பேருக்கு குடிநீர் வழங்க முடியும். உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக 37,854 லிட்டர் (சுமார் பத்தாயிரம் காலன்) தண்ணீர் வீணாக்கப்படுகிறது. சிங்கப்பூரில் மட்டும் ஒரு தனியாள் ஒரு நாளைக்கு சுமார் 154 லிட்டர் நீரையும் (41 காலன்) அமெரிக்காவில் ஒரு தனியாள் சுமார் 262 லிட்டர் (69 காலன்) நீரையும் செலவழிக்கிறார். கழிப்பறைகளுக்கு 18.5 காலன்களையும் குளியலுக்கு 15 காலன்களையும் குழாய்களில் 11 காலன்களையும் பயன்படுத்தப்படுகின்றனர். நியுயார்க், சிங்கப்பூர், ஜகார்த்தா, ரியோ தெ ஜனெய்ரோ, பொகோட்டா, மத்ரித், கேப்டவுண் போன்ற உலகின் மாநகரங்கள் குறிப்பிட்ட அளவு குடிநீரை வனப் பகுதிகளிலிருந்து எடுக்கின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை நாட்டின் நூறு கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு சுத்தக் குடிநீர் வசதி இல்லை. நாட்டின் 626 மாவட்டங்களில் ஏறத்தாழ பாதி, 2009ம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டன. சுமார் 40 விழுக்காட்டு வீடுகளுக்கு சுத்தமான நீர் வசதி கிடையாது. நாட்டின் தண்ணீரில் சுமார் 80 விழுக்காடு வேளாண்மைக்கெனப் பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதியில் மக்களைப் பாதிக்கும் நோய்களில் 80 விழுக்காடு சுத்தமற்றத் தண்ணீரோடு தொடர்புடையது.
அன்பர்களே, 1948ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் அறிக்கையில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் தண்ணீருக்கு இவ்வளவு நெருக்கடி வரும் என்று அன்று யாரும் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. ஆனால் அதன் பத்தாண்டுகள் கழித்து வறுமை, சுத்தமற்ற நீர், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உலகின் தெற்கில் எண்ண முடியாத அளவில் மக்கள் கொல்லப்பட்டனர். எனவே மனிதனின் அடிப்படை உரிமைகளில் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்று பல மனித உரிமைக் குழுக்களும் ஆர்வலர்களும் குரல் கொடுக்கத் தொடங்கினர். இன்று தண்ணீர் தினம் என்ற ஓர் உலக நாளைக் கடைபிடிக்கும் நிலைக்கு உலகு உள்ளாகியிருக்கிறது. அந்த அளவுக்குத் தண்ணீர் தட்டுப்பாடும் அதன் தேவையும் அதிகரித்திருக்கின்றன. மனிதன் தனது பேராசையினால் இயற்கையில் கைவைக்க, அதன் நிலத்தடி நீரைச் சுரண்டச் சுரண்ட அவனது துன்பங்களும் அதிகரிக்கின்றன. அறிவியல் வளர்ச்சி குறித்து மனிதன் ஆணவம் கொள்ளும் போதெல்லாம் அதைக் காலால் உதைத்துச் செல்கிறது இயற்கை. இந்த இயற்கைக்கு எதிரான எந்தச் செயலும் அழிவையே கொண்டு வரும். இந்த இயற்கை மனிதனின் பேராசைகளையும் நிராசைகளாக மாற்றி விடுகின்றது. ஜப்பான் நிலஅதிர்வும் சுனாமியும் அவற்றைத் தொடர்ந்து இடம் பெற்று வரும் அணுமின் நிலையக் கதிர் வீச்சுக்களுமே ஓர் எடுத்துக்காட்டு.
நலமான நோய்நொடி இல்லாத வாழ்வுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏழைகள் ஒரு லிட்டர் குடிதண்ணீர் வாங்குவதற்கே கஷ்டப்படும் போது மூன்று லிட்டருக்கு எங்கே போவது? “தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே” என்பார்கள். தாயைவிடத் தண்ணீரைப் போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் பழமொழி இது. ஆனால் நதிகளைத் தாயாய், தெய்வமாய், புனிதமாய்ப் போற்றும் மக்களாகிய நாம் அவற்றைச் சுத்தமாக, மாசு அடையாமல் வைப்பதற்கு மட்டும் ஏன் முன்வருவதில்லை?. கங்கையில் குளித்தாலே புனிதமடையலாம் என்ற நம்பிக்கை இருந்த காலம் மாறி அதில் குளித்தால் தோல் வியாதி வரும் என்ற எண்ணம் பரவத் தொடங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கங்கை உலகின் மிக அழுக்கான நதிகளில் ஒன்றாகவும் குறிக்கப்பட்டுவிட்டது. எனவே சுத்தமான நீரை அசுத்தம் செய்யும் நாம் ஒவ்வொருவருமே சமுதாயக் குற்றவாளிகள் அல்லவா!
ஆதலால் அன்பர்களே, ஒருவாய்த் தண்ணீர் கிடைக்காமல் எத்தனையோ மனித உயிர்கள் மரித்துப் போயிருக்கின்றன. இந்தத் தண்ணீரின் அருமைபெருமையை, அதன் பயனை உணர்ந்து அதனை மாசுபடுத்தாமல், வீணாக்காமல் இருப்பதற்கு இந்த 18வது உலக நீர் நாளில் தீர்மானம் எடுப்போம். இதற்கான நடைமுறைகளைச் சொந்த வீடுகளிலும் அக்கம் பக்கத்திலும் எடுத்துச் சொல்லுவோம். ஏனெனில் தண்ணீர்தான் நம் வாழ்வின் உயிர்நாடி. நீரின்றி உலகு அமைவது மிகவும் கடினம். அவ்வை மூதாட்டியும் சொன்னார் –
“வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்” . ஆம். மனித சமுதாயம் உயர நீர்வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.