2011-03-21 15:33:27

மார்ச் 21. வாழ்ந்தவர் வழியில்.....


இந்திய அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான பாரத இரத்னா வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்ட ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான் 1916ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி பீஹாரில் பிறந்தார்.
இசை மேதை பிஸ்மில்லா கான், கங்கா மாயி என்று கங்கைக் கரையைப் போற்றியபடி தன் வாழ்நாளெல்லாம் காசியிலேயே கழித்தவர். இவரது முன்னோர்கள் போஜ்பூர் அரசவைக் கலைஞர்கள். ஆனால் ஷெனாய் வாத்தியத்தை உலக அளவில் பிரபலமாக்கிய பெருமை பிஸ்மில்லா கான் என்ற தனி மனிதனையேச் சேரும்.
1947-ல் இந்தியச் சுதந்திரம் இவரது இசையுடனே செங்கோட்டையில் பிறந்தது.
அவர் கால் வைக்காத முக்கிய தலைநகரங்களே உலகில் இல்லை எனலாம்.
இந்தியாவின் மிக உயரிய பாரத இரத்னா விருது 2001 இல் இவருக்கு வழங்கப்பட்டது.
வேண்டிய அளவு செல்வம் சேர்ந்த போதும் தனிப்பட்ட வசதிகளை அவர் பெருக்கிக் கொள்ளவில்லை.
காசி நகரத்து தெருக்களிலே சைக்கிள் ரிக்ஷாவிலேயே போய்வருவார். இசைக் கச்சேரிகளுக்காக எங்கு சென்றாலும் எளிமையான விருந்தோம்பலையே ஏற்றார். ஐந்து நட்சத்திர விடுதிகளை வெறுத்தார். எந்நேரத்திலும் வீடு தேடி வருபவர்களுக்கு் அவர் வீட்டில் உணவு இருக்கும்.
இவர் ஒரு குழந்தை உள்ளம் படைத்த கலைஞர். பணிவு குணத்திற்கு அவர் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டு.
அவருடைய கண்களில் ஒரு முனிவரின் தவம் தெரியும். அவர் செய்தது இசைத் தவம்.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி மறைந்த இவர், பாரத இரத்னா தவிர, பத்மவிபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, தான்சேன் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.