2011-03-19 14:49:09

தனித்துவத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களை இழக்கும் போது தனித்துவத்தையே இழக்கும் ஆபத்து ஏற்படுகின்றது : கர்தினால் ரவாசி


மார்ச்19,2011. இத்தாலியில் பள்ளிகள் உட்பட பொது இடங்களில் திருச்சிலுவைகள் வைக்கப்படுவது ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்குமானக் கிறிஸ்தவத்தின் முக்கிய பங்களிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்று திருப்பீடக் கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிரான்கோ ரவாசி கூறினார்.
கிறிஸ்தவம், மேற்கத்திய கலாச்சாரத்தை அமைத்த “அடிப்படைக் கூறாக” இருக்கின்றது என்றும் இதனை ஏற்பதற்கு யாரும் விரும்பவில்லையென்றாலும் இக்கலாச்சாரத்தில் கிறிஸ்தவத்தின் பிரசன்னம் என்பது திட்டவட்டமானது என்றும் கர்தினால் ரவாசி கூறினார்.
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் கருத்துத் தெரிவித்த கர்தினால் ரவாசி, திருச்சிலுவை விசுவாசிகளுக்கு மத அடையாளமாக இருந்தாலும், இது மேற்கில் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் இருக்கின்றது என்றார்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் மக்கள் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களைக் காண்கின்றனர், இந்த அடையாளங்களை இழக்கும் போது தனித்துவத்தையே இழக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்றார் கர்தினால் ரவாசி.







All the contents on this site are copyrighted ©.