2011-03-19 14:52:54

ஜப்பான் அணு உலை ஆபத்து குறித்தத் தெளிவானத் தகவல்கள் வழங்க ஐ.நா. அதிகாரி வேண்டுகோள்


மார்ச்19,2011. ஜப்பானின் அணு உலைகள் ஆபத்து குறித்து முழுமையான தகவல்களை விரைவாக வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளைக் கேட்டுள்ளார் IAEA என்ற சர்வதேச அணுசக்தி நிறுவன இயக்குனர் Yukiya Amano.
டோக்கியோவுக்கு அவசரமாகப் பயணம் மேற்கொண்டு ஜப்பான் பிரதமர் Naoto Kan, பிற அமைச்சர்கள், இன்னும் மின்சக்தி கம்பெனி அதிகாரிகளைச் சந்தித்து இந்தக் கதிரியக்கக் கசிவுப் பிரச்சனைக்கு உதவுவது குறித்து ஆலோசனை நடத்திய Amano இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
IAEA நிறுவனமும் தனது மேற்பார்வையாளர்களை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளது.
புகுஷிமாவில் இருக்கும் அணுமின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களையொட்டி ஏற்பட்டுள்ள கதிரியக்கக் கசிவின் அளவு இதுவரை நான்காக இருந்தது. அது தற்போது ஐந்தாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
உலக அளவில் அணுவிபத்துக்களின் தீவிரத்தன்மையை உணர்த்துவதற்கு ஒன்று முதல் ஏழு வரையிலான குறியீடு பயன்படுத்தப்படுவது வழக்கமாகும். ஒன்று என்பது மிகக்குறைவானப் பாதிப்பைக் குறிக்கும். ஏழு என்பது அதிகபட்ச பாதிப்பை குறிக்கும். இது, 1986ஆம் ஆண்டு உக்ரைய்னில் இருக்கும் செர்னோபில்லில் நடந்த அணுப் பேரழிவைவிட இரண்டு புள்ளிகள் குறைவாக இருந்தாலும், 1979ஆம் ஆண்டு அமெரிக்காவின் திரீமைல் தீவுகளில் நடந்த அணுவிபத்தின் அளவும் தற்போதைய அணுமின் நிலைய அழிவும் ஒரே அளவில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.