2011-03-19 14:50:09

22 மார்ச் உலகத் தண்ணீர் தினம் - பான் கி மூனின் செய்தி


மார்ச்19,2011. நல்லதோர் எதிர்காலத்தை அமைப்பதற்கு முயற்சித்து வரும் உலகு தண்ணீர், உணவு, மின்சக்தி போன்றவற்றில் பற்றாக்குறைச் சவால்களையும் சந்தித்து வருகின்றது என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
“நகரங்களுக்குத் தண்ணீர்” என்ற தலைப்பில் மார்ச் 22ம் தேதி கடைபிடிக்கப்படும் உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு செய்தி வழங்கிய பான் கி மூன், இன்னும் சிறிது காலத்தில் உலகின் 60 விழுக்காட்டு மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் என்று கூறியுள்ளார்.
தண்ணீர் வசதியின்றி வாழும் நகரவாசிகளின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 11 கோடியே நாற்பது இலட்சமாக இருக்கின்றது என்றும் நகரங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி வாழ்வோரின் எண்ணிக்கை 13 கோடியே 40 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் அவரின் செய்தி கூறுகின்றது.
உலகில் தண்ணீர் மற்றும் நலவாழ்வு வசதியின்றி வாழும் 80 கோடிக்கு மேற்பட்ட மக்கள் மாண்புடன் வாழ்வதற்கு வழி செய்வோம் என்றும் பான் கி மூனின் செய்தி கூறுகின்றது.







All the contents on this site are copyrighted ©.