2011-03-18 15:54:45

பேராயர் வார்தா : ஈராக்கின் பலவீனமான அரசியல் அமைப்பு, தற்போதைய பிரச்சனைக்கு ஒரு காரணம்


மார்ச்18,2011. இரண்டு தலைவர்களைத் திருப்திபடுத்துவதற்கு முயற்சிப்பது போல் அமைந்துள்ள பலவீனமான அரசியல் அமைப்பு, ஈராக் நாட்டின் தற்போதைய பிரச்சனையின் ஓர் அங்கமாக இருக்கின்றது என்று அந்நாட்டு பேராயர் ஒருவர் கூறினார்.
Aid to the Church in Need என்ற ஜெர்மனியின் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம் நடத்திய நிருபர் கூட்டத்தில் பேசிய ஈராக்கின் Irbil பேராயர் Bashar Warda இவ்வாறு கூறினார்.
“நசுக்கப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்” என்ற தலைப்பில் புதிய அறிக்கை வெளியிடுவதற்காக இப்பிறரன்பு நிறுவனம் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
ஈராக் அரசை நிலைகுலையச் செய்வதற்காக அதன் அண்டை நாடுகள் பணத்தையும் ஆயுதங்களையும் கொடுக்கின்றன, இச்செயல் நாட்டில் கிளர்ச்சிக்கு வித்திடுகின்றது என்றும், ஈராக்கில் மனித உரிமை மீறல்களும் கிறிஸ்தவர்கள் அனுபவித்த இனப்படுகொலைகளும் தற்காலிகமானவை என்று நினைத்து உலகின் பிற அரசுகள் ஒதுங்கிவிட்டன என்றும் பேராயர் வார்தா தெரிவித்தார்.
ஈராக்கில் 2003ல் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைமையில் நடந்த ஆக்ரமிப்புக்குப் பின்னர் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2006க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் 17 ஈராக்கிய குருக்களும் இரண்டு ஆயர்களும் கடத்தப்பட்டு அடிக்கப்பட்டனர் மற்றும் சித்ரவதை செய்யப்பட்டனர். ஓர் ஆயர், நான்கு குருக்கள் மற்றும மூன்று தியாக்கோன்கள் கொலை செய்யப்பட்டனர் என்றார் பேராயர் வார்தா.
கிறிஸ்தவர்கள் ஈராக்கை வி்டடு வெளியேற வேண்டுமென்பதே இந்த வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம் எனவும் அவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.