2011-03-18 15:53:46

தேவ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட கத்தோலிக்கரின் மரணத்திற்கு மாரடைப்புக் காரணமல்ல- பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்


மார்ச்18,2011. பாகிஸ்தானில் தேவ நிந்தனை குற்றத்தின் பேரில் ஆயுள் தண்டனை அனுபவித்த வந்த கத்தோலிக்கரின் இறப்புக்கு மாரடைப்பு காரணமல்ல, மாறாக அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலையுண்டார் என்று அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.
55 வயதான Qamar David என்பவர் தேவ நிந்தனை குற்றத்தின் பேரில் 2006ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். ஆயினும் அவர் இத்திங்கள் நள்ளிரவு அல்லது செவ்வாய் அதிகாலையில் சிறையில் இறந்து கிடந்தார் எனவும் இதற்கு மாரடைப்புக் காரணம் எனவும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கை உண்மையல்ல என்றுரைத்த அதேவேளை, தேவ நிந்தனை விவகாரம் தொடர்பாக இசுலாம் தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து நடத்தும் வெறுப்புணர்வு வன்செயலுக்கு டேவிட் பலியாகி இருக்கக்கூடும் என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம் அறிவித்தது.
நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான டேவிடின் அடக்கச் சடங்கு இவ்வியாழனன்று லாகூர் புனித யோவான் ஆலயத்தில் நடைபெற்றது. லாகூர் துணை ஆயர் செபஸ்டியான் ஷா இந்தத் திருப்பலியை நிறைவேற்றினார்.
இம்மாதம் இரண்டாம் தேதி கொலையுண்ட பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhattiன் மரணம் தந்த வேதனையிலிருந்து மீள்வதற்கு முன், மீண்டும் ஒரு மரணத்தைச் சந்தித்திருப்பது ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளதென்று இராவல்பிண்டி ஆயர் Rufin Anthony கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.