2011-03-17 16:01:32

உங்கள் விசுவாசத்தைக் குறித்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் - பேராயர் இரபேல் சீனத்


மார்ச் 17,2011. உங்கள் விசுவாசத்தை ஓர் உயர்ந்த நிலைக்கு நீங்கள் கொண்டு சென்றுள்ளீர்கள். உங்களைக் குறித்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் என்று இந்திய ஆயர் ஒருவர் கத்தோலிக்க விசுவாசிகளிடம் கூறினார்.
ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் 2008ம் ஆண்டு அழிக்கப்பட்ட ஒரு கத்தோலிக்கக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இச்செவ்வாயன்று அடிக்கல் நாட்டிய கட்டக் புபனேஸ்வர் பேராயர் இரபேல் சீனத் இவ்வாறு கூறினார்.
வருகிற ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி தன் ஆயர் பொறுப்பிலிருந்து ஒய்வு பெறவிருக்கும் பேராயர் சீனத், கந்தமால் பகுதியில் தன் இறுதி மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அப்பகுதியில் வாழும் கத்தோலிக்கர்களின் விசுவாசத்தைப் பாராட்டிய பேராயர், தொடர்ந்து அம்மக்கள் அப்பகுதியில் அமைதியும் பாதுகாப்பும் நிலவ உழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பேராயர் இரபேல் சீனத் உச்ச நீதி மன்றம் வரை தங்கள் வழக்கை எடுத்துச் சென்று, தங்களுக்காகப் போராடினார், மேலும் கத்தோலிக்கர், கிறிஸ்தவர் என்ற பாகுபாடுகள் பார்க்காமல், வன்முறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் அவர் போராடினார் என்று Jacob Digal என்ற ஒரு கிராமத்துத் தலைவர் கூறினார்.
பேராயரின் அறிவுரைகளுக்குச் செவி மடுத்ததால், கிறிஸ்தவர்கள் வன்முறையில் அதிகம் இறங்காமல், அப்பகுதியில் அமைதி நிலவும் முயற்சிகளில் ஈடுபட்டதால், அரசின் பணிகள் ஓரளவு எளிதாக்கப்பட்டதென்று அரசு ஊழியரான Satyabrata Jena, UCAN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.