2011-03-16 16:12:36

வரலாற்று நினைவுகளின் காயங்களைப் புறந்தள்ளி, ஜப்பானியர்களுக்கு உதவி செய்ய தென் கொரிய காரித்தாஸ் அழைப்பு


மார்ச் 16,2011. ஜப்பானில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவு மற்றும் அணுக்கதிர் வீச்சு ஆபத்து ஆகியவைகளிலிருந்து அம்மக்களைக் காப்பாற்ற செபிக்கும்படியும் நிதி உதவிகள் செய்யும்படியும் தென்கொரியாவின் கர்தினால் Nicholas Cheong Jin-suk மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை அனுப்பியுள்ளார்.
Seoul உயர்மறைமாவட்டத்தின் சார்பில் 50,000 டாலர்கள் உடனடியாக அளிப்பதாகவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
கொரிய ஆயர் பேரவை அந்நாட்டின் 16 மறைமாவட்டங்களிலும் நிதிகள் திரட்டி ஜப்பானுக்கு அனுப்ப முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று கொரிய ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Peter Kang U-il செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜப்பானும், தென் கொரியாவும் வரலாற்றில் பெரும் எதிரிகளாய் இருந்த இரு நாடுகள். இவ்விடர் நேரத்தில் தங்கள் வரலாற்றுப் பகையை மறந்து அம்மக்களுக்கு பல வழிகளிலும் உதவுவதற்கு கொரிய மக்களை அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு தூண்டி வருகின்றது.
ஜப்பான் நாட்டைக் குறித்து நமது வரலாற்று நினைவுகள் காயப்பட்டவைகளாக இருந்தாலும், இந்நேரத்தில் அவைகளைப் புறந்தள்ளி, அவர்களுக்கு செபத்தாலும், இன்னும் பிற வழிகளிலும் உதவ முன் வர வேண்டுமென்று கொரிய காரித்தாஸ் அமைப்பின் தலைவரும், Daejon மறைமாவட்டத்தின் ஆயருமான Lazzaro You Heung-sik கூறினார்.
கொரிய காரித்தாஸ் அமைப்பு ஜப்பான் மக்களுக்கு உடனடியாக 100,000 டாலர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.கத்தோலிக்கர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் போலவே, பிற கிறிஸ்தவ அமைப்புக்களும், புத்த அமைப்புக்களும் தங்கள் குழுக்களை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.