2011-03-16 16:13:33

தேவ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட கிறிஸ்தவர் பாகிஸ்தான் சிறையில் மரணம்


மார்ச் 16,2011. தேவ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட Qamar David என்ற கிறிஸ்தவர் இத்திங்கள் நள்ளிரவு, அல்லது செவ்வாய் அதிகாலையில் பாகிஸ்தான் சிறையில் மரணம் அடைந்தார். இவர் மாரடைப்பால் காலமானார் என்று காவல் துறை அறிவித்துள்ளது.
நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான Davidன் உடல் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசொதனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதென்றும், அப்பரிசோதனையின் முடிவுகள் அவரது மரணம் குறித்தத் தெளிவை ஏற்படுத்தும் என்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தலத்திருச்சபையும், பிற கிறிஸ்தவ அமைப்புக்களும் இம்மரணம் குறித்த முழு விசாரணையை அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளன.
Qamar David என்ற 56 வயது நிறைந்த ஓவியர், லாகூருக்கு அருகே பிறந்தவர். 2006ம் ஆண்டு David உடன் எழுந்த தொழில் போட்டியினால் வேறொரு இஸ்லாமியர் இவர் தேவ நிந்தனை குற்றம் புரிந்ததாக வழக்கு தொடர்ந்தார். இவர் 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேவ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டார்.
இம்மாதம் இரண்டாம் தேதி கொலையுண்ட பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhattiன் மரணம் தந்த வேதனையிலிருந்து மீள்வதற்கு முன், மீண்டும் ஒரு மரணத்தைச் சந்தித்திருப்பது ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளதென்று இராவல்பிண்டி ஆயர் Rufin Anthony ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களின் இரத்தத்தைக் குடித்து வரும் இந்த தேவ நிந்தனைச் சட்டத்தை இந்த நாட்டிலிருந்து அகற்ற இன்னும் எத்தனை உயிர்களைத் தியாகம் செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளதென்று ஆயர் Anthony மேலும் கூறினார்.
இதற்கிடையே, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளுக்குப் பயந்து ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.இப்புதனன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், லாகூரைச் சேர்ந்த Jamia Naeemia என்ற ஒரு இஸ்லாமிய நிறுவனத்தின் பதிவேட்டின்படி, 2009ம் ஆண்டில் 678 கிறிஸ்தவர்களும், 2010ல் 693 கிறிஸ்தவர்களும் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர், மற்றும் இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் இந்த எண்ணிக்கை 95 ஆக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.