2011-03-16 16:12:21

திருத்தந்தை : இத்தாலிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு மையமாகச் செயல்பட்டவர்கள் கத்தோலிக்கர்


மார்ச்16,2011. இத்தாலிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு மையமாகச் செயல்பட்டவர்கள் கத்தோலிக்கரே என்று இப்புதனன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலி, ஒன்றிணைந்த நாடாக அமைந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டு இத்தாலிய அரசுத் தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இத்தாலி நாட்டு வரலாற்றில் கிறிஸ்தவம் மற்றும் திருச்சபையின் பங்கு பற்றிய தனது ஆழமானச் சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இத்தாலியில் மத்திய காலம் தொடங்கி கல்வி, கலை, நலவாழ்வு, புனிதம் உட்பட பல துறைகளில் கிறிஸ்தவம் ஆற்றி வரும் பங்கைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, “இத்தாலியர்கள்” என்ற நிலை உருவாகுவதற்கு ஜியோபெர்த்தி, ரோஸ்மினி, மன்சோனி, பெல்லிக்கோ, புனித ஜான் போஸ்கோ போன்ற பெருந்தலைவர்களை நினைவுகூர்ந்தாலே போதுமானது என்று கூறியுள்ளார்.
1929ம் ஆண்டின் இலாத்தரன் ஒப்பந்தங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ள அவர், பாப்பிறையின் உலகளாவியப் பணிக்கு புதிய திருப்பத்தையும் மிகுந்த பலனையும் இந்த ஒப்பந்தங்கள் கொடுத்தன என்று கூறியுள்ளார்.
இத்தாலியர்கள் சுதந்திரம், நீதி மற்றும் அமைதியின் காரணிகளாகச் செயல்படுவதற்கு அவர்கள் விசுவாச ஒளியில் எப்பொழுதும் வழிநடத்தப்பட வேண்டுமென்று தான் செபிப்பதாகவும் அச்செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.இத்தாலி, ஒன்றிணைந்த நாடாக அமைந்ததன் 150ம் ஆண்டு மார்ச் 17, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படுகிறது. இதனையொட்டி இத்தாலிய அரசுத் தலைவர் மாளிகையில் அரசுத் தலைவரைச் சந்தித்து திருத்தந்தையின் இந்த வாழ்த்துச் செய்தியை இப்புதனன்று வழங்கினார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே. இவ்வியாழனன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் கர்தினால் கலந்து கொள்வார். இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ தலைமையில் அப்பேரவையும் தூதர்களின் மரியா பசிலிக்காவில் இவ்வியாழனன்று திருப்பலி நிகழ்த்தி இவ்விழாவைச் சிறப்பிக்கின்றது.







All the contents on this site are copyrighted ©.