2011-03-15 15:49:15

விவிலியத்
தேடல்


RealAudioMP3
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசியாவின் பல கடற்கரைப் பகுதிகளை அழித்த சுனாமியைப் போல், கடந்த வெள்ளியன்று (மார்ச் 11, 2011) மற்றுமொரு சுனாமி ஜப்பானைத் தாக்கியுள்ளது. சுனாமி என்ற வார்த்தையை உலகிற்கு அறிமுகம் செய்ததே ஜப்பானியர்கள்தாம். பல பயங்கர நிலநடுக்கங்களையும், சுனாமிகளையும், சந்தித்துள்ள அவர்களுக்கே இம்முறை நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி, இவைகளைத் தொடர்ந்து அணுசக்தி மின் நிலையங்களில் ஏற்பட்ட விபத்துக்கள் ஜப்பானியர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்த நிகழ்வுகளைக் குறித்து வேறுபட்ட, முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை நாம் கேட்டு வருகிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பின், அமைதிக்கும் உலக வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் ஜப்பான் மக்களுக்கு ஏன் இந்தக் கொடுமை? என்று கேள்வியை எழுப்புகிறோம்.
உலகின் முதல் தர நாடுகளில் ஒன்றான ஜப்பானுக்கே இந்த நிலை என்றால், உலகில் பல நாடுகளுக்கு இது ஒரு பாடம். அதிலும் அணு சக்தியை அதிகமாய் நம்பி வாழும் பல வளரும் நாடுகளுக்குத் தரப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கை இது என்பதும் நாம் கேட்கும் ஒரு கருத்து.
சாம்பலில் இருந்து எழுந்துவரும் Phoenix புராணப் பறவையைப் போல் உலகப் போருக்குப் பின் உழைப்பால் உயர்ந்த ஜப்பானியர்கள், இந்த இயற்கைப் பேரிடருக்குப் பின்னும் காட்டும் பொறுமை, மேற்கொண்டுள்ள முயற்சிகள் உலகை வியப்படைய வைத்துள்ளது. அம்மக்களிடம் இருந்து உலக மக்கள் கற்றுக் கொள்ளக்கூடிய பல பாடங்கள் உள்ளன என்பதும் நாம் பேசி வரும் ஒரு கருத்து.

நிகழ்ந்தது ஒன்று. அதைக் காணும் கண்ணோட்டம், அதிலிருந்து பிறக்கும் கருத்துக்கள் பல. வாழ்வில் நடப்பவைகளைப் பற்றிய நம் கண்ணோட்டமே நம் மனதை உறுதியாய் நிற்க வைக்கும், அல்லது, நம்பிக்கையிழந்து நொறுங்கிப் போகச் செய்யும். திருப்பாடல் 23 நமக்குச் சொல்லித் தருவதும் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு கண்ணோட்டமே. உலகில் துன்பங்கள் படைதிரண்டு வந்தாலும், இறைவனின் அருள் நலமும், பேரன்பும் நம்மைப் புடைசூழ்ந்து வரும் என்பதைத் திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். நாம் சிந்தித்து வரும் திருப்பாடல் 23ம், சிறப்பாக, இப்போது நாம் சிந்திக்கும் ஆறாம் திருவசனமும் துன்பங்களைத் தொடர்ந்து சந்தித்து வரும் ஜப்பான் மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் நம் தேடலை இன்று ஆரம்பிப்போம்.

கண்ணோட்டங்களைப் பற்றிப் பேசும்போது, என் சொந்த அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்து வந்த இயேசு சபைத் துறவிகள் இல்லத்தில் 90 வயதைத் தாண்டிய ஒரு குருவும் வாழ்ந்து வந்தார். ஏழைகளைக் கண்டதும் மனமிரங்கி, தன்னிடம் உள்ள பணத்தைத் தர்மம் செய்வது அவர் வழக்கம். அவரது இரக்கக் குணத்தைப் பயன்படுத்தி, ஞாபகச் சக்தி குறைந்த அவரது வயதைப் பயன்படுத்தி, ஒரு சிலர் அவரை ஏமாற்றவும் செய்தனர். குழந்தையொன்றைத் தூக்கி வந்து, அக்குழந்தைக்கு உணவும், மருந்தும் வாங்கப் பணமில்லை என்று சொல்லி ஒரு தாய் அவரிடம் பணம் பெறுவார். அரைமணி நேரம் கழித்து, இன்னொரு பெண் அதேக் குழந்தையைத் தூக்கி வந்து உணவுக்கும், மருந்துக்கும் பணம் பெறுவார். இப்படி வயது முதிர்ந்த அந்த குருவை ஏமாற்றிப் பணம் பெறுபவர்களைப் பற்றி ஒருநாள் நான் அவரிடம் பேசினேன்: "சாமி, பல ஏழைகளுக்கு நீங்க உதவிகள் செய்றீங்க... நல்லதுதான்... ஆனா, நீங்க செய்ற உதவி உணமையிலேயே தேவையில இருக்கிறவங்களுக்குப் போய் சேருதான்னு பாக்க வேண்டாமா? பல பேரு உங்கள ஏமாத்தி பணம் வாங்கிட்டுப் போறாங்களே, அது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் என் மனதில் ஆழமாய்ப் பதிந்தது. இன்று நினைவுக்கு வருகிறது. "ஒரு நாளைக்கு சுமார் 30 பேருக்கு நான் உதவிகள் செய்றேன். அதுல ஒருத்தர் ரெண்டு பேராவது உண்மையிலேயே தேவை உள்ளவங்களா இருப்பாங்க. எமாத்றவங்கள என்ன செய்யமுடியும்? அவுங்களுக்காகப் பயந்து, உணமையிலேயேத் தேவை உள்ளவங்களுக்கு எப்படி உதவாம இருக்க முடியும்?" என்று அவர் என்னிடம் மறு கேள்வி கேட்டார். ஏமாற்றுகிறவர்களை மட்டும் எண்ணிப்பார்த்தது என் கண்ணோட்டம்; தேவையில் இருப்பவர்களை மட்டும் எண்ணிப் பார்த்தது அவரது கண்ணோட்டம்.

"பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும்." "ஆற்றில் கொட்டினாலும், அளந்து கொட்ட வேண்டும்." என்ற பழமொழிகள் இந்த 90 வயது குரு ஏற்றுக்கொள்ள மறுக்கும் பழமொழிகள். உண்மைத் தேவையில் இருக்கும் ஒருவருக்கு உதவிகள் செய்வதற்காக, பலரிடம் ஏமாந்து போனாலும் பரவாயில்லை என்று சிந்திக்கும் இந்த குரு கடவுளின் Hesed என்ற பேரன்புக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு. தகுதி, தரம் பாராமல் தரப்படும் Hesed என்ற அன்பு பைத்தியக்காரத்தனமான அன்பாகத் தெரியும். தவறிப்போன ஓர் ஆட்டைத் தேடி, மற்ற 99 ஆடுகளை விட்டுச் செல்லும் ஆயன், எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு மீண்டும் வந்த மகனிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் விருந்து கொடுக்கும் தந்தை ஆகிய உவமைகள் இந்தப் பைத்தியக்காரத்தனமான அன்புக்கு எடுத்துக்காட்டாக இயேசு கூறும் உவமைகள். Hesed என்ற பேரன்பைப் பற்றி திருப்பாடல் 23ன் ஆசிரியர் கூறியுள்ள இறுதி வரியில் நம் தேடலைத் தொடர்கிறோம்.

பல்வேறு பெயர்களால் நாம் கடவுளை அழைத்தாலும், கடவுள் ஒருவரே என்று சொல்கிறோம். அதேபோல், அன்பு, கனிவு, கருணை, காதல், பரிவு, பாசம் என்று நாம் பயன்படுத்தும் பல்வேறு சொற்கள் ஒரே உண்மையின், ஒரே உணர்வின் பல்வேறு முகங்கள். இந்தப் புனித உணர்வைச் சொல்ல தமிழில் பல வார்த்தைகள் இருப்பது போல், எபிரேய மொழியிலும் பல வார்த்தைகள் உண்டு. இந்த உணர்வுகளின் ஓர் ஒட்டமொத்த வார்த்தையாக Hesed பயன்படுத்தப்படுகிறது. Hesed என்ற வார்த்தைக்கு இஸ்ரயேல் மக்கள் மத்தியில் நிலவி வந்த எண்ணங்களைப் புரிந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும்.

Hesed என்பது இஸ்ரயேல் மக்கள் வாழ்வின் அடிப்படை நியதி. அவர்களைப் பொறுத்தவரை இந்த உலகம் மூன்று தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. Torah என்று அழைக்கப்படும் இறைச் சட்டங்கள் முதல் தூண். இறைவனுக்குப் புரியும் பணிகள் இரண்டாவது தூண். அன்பு காட்டுவது மூன்றாவது தூண். Torahவின் துவக்கமும் முடிவும் Hesed என்று சொல்லப்படுகிறது.

இஸ்ரயேல் மக்களின் பாரம்பரியத்தில் ஆழமாய் ஊறிய ஓர் எண்ணம்... ஓர் உணர்வு... கருணை, பரிவு. இறைச் சட்டங்களும், இறைவாக்கினர்களும் மீண்டும் மீண்டும் இந்த உண்மையை வலியுறுத்தி வந்துள்ளனர். அதிலும் சிறப்பாக, சமுதாயத்தில் மிகவும் நலிந்த மக்களான, ஏழைகள், அனாதைகள், விதவைகள், அந்நிய நாட்டவர் மீது தனிப்பட்ட பரிவு காட்ட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் விவிலியம் சொல்கிறது.
இந்தக் கருணை, பரிவு வெறும் கடமைக்காகச் செய்யப்படுவதல்ல, மாறாக, தங்கள் வாழ்வின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட ஒரு பாடமாக இஸ்ராயலர்களின் கருணை அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக, அந்நிய நாட்டவர் மீது இஸ்ரயேல் மக்கள் பரிவு காட்ட காரணமாய்ச் சொல்லப்படுவது என்ன?... ஒரு காலத்தில் அவர்களும் வேற்று நாட்டில் அன்னியராய் இருந்தனர் என்ற உண்மை. இதை வலியுறுத்தும் பல பகுதிகளை விவிலியத்தில் வாசிக்கிறோம். இதோ ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்:

விடுதலைப்பயணம் 22: 21-23
அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.

லேவியர் 19: 34
உங்களிடம் தங்கும் அன்னியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அன்னியர்களாய் இருந்தீர்கள்: நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

இணைச்சட்டம் 10: 18-19
அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே.19 அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்: ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.

எசேக்கியல் 47: 22-23
அவர் என்னிடம் உரைத்தது: நீங்கள் இதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகவும், உங்கள் நடுவில் வந்து குடியேறி உங்கள் நடுவில் பிள்ளைகள் பெற்றெடுத்த அன்னியரின் உரிமைச் சொத்தாகவும் பங்கிட வேண்டும். அவர்களும் உங்கள் நாட்டில் பிறந்த இஸ்ரயேலராகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். உங்களோடு சேர்ந்த இஸ்ரயேலின் குலங்கள் நடுவே அவர்களுக்கும் உரிமைச் சொத்து வழங்கப்பட வேண்டும். அன்னியன் எந்தக் குலத்தோடு சேர்ந்து குடியேறினாலும், அங்கே அவனுக்கு உரிமைச் சொத்து வழங்கப்பட வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நாம் வாழ்ந்து வரும் இக்காலத்தில் இஸ்ரயேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே இந்தப் பரிவும், கனிவும் வெகுவாகக் குறைந்துள்ளது என்பது நாம் கண்டு வரும் எதார்த்தம். அவர்களை மட்டும் குற்றவிரல் கொண்டு சுட்டிக்காட்ட வேண்டாம். சொந்த நாட்டுக்குள் அன்னியராய், அகதிகளாய் வாழும் மக்கள் உலகின் பல நாடுகளில் அதிகமாகி வருவதையும், மதம், மொழி, நிறம், குலம் என்று மனித குலத்தை பலநூறு பிரிவுகளாக்கி, அன்னியரை அநியாயமாய் நடத்தும் போக்கு அதிகரித்து வருவதையும் வேதனையோடு இப்போது நினைத்துப் பார்ப்போம். Hesed பற்றி எண்ணும்போது, மனித குலத்தில் பிரிவுகள் எல்லாம் மறைந்து, பரிவு வளர வேண்டுமென செபிப்போம்.

“உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்” என்ற இவ்வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கும்படி நம்மை Harold Kushner தூண்டுகிறார்.
இறைவனின் அருளும் அன்பும் தன்னைச் சூழ்ந்து வருவதால், தன்னை அனைவரும் பரிவோடு, கருணையோடு நடத்துவார்கள் என்ற செபத்தை தாவீது எழுப்புகிறார் என்று இவ்வரியைக் காணலாம். அல்லது, இறைவனின் அன்பை, அருளைச் சுவைத்த தான் தன் வாழ்நாளின் இறுதிவரை அனைவரையும், பரிவோடு, கருணையோடு நடத்தும் பக்குவம் பெறவேண்டும் என்ற செபத்தை தாவீது எழுப்புவதாகவும் இந்த வரியைக் காணலாம். Kushnerஐப் பொறுத்தவரை, தாவீது இவை இரண்டிற்காகவும் செபித்தார் என்று சொல்கிறார்.

அருள் நலமும், பேரன்பும் வாழ்நாளெல்லாம் நம்மைப் புடைசூழ்ந்து வந்தால், உலகம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்ற அற்புதமான கற்பனையை Kushner நம் கண் முன் கொண்டு வருகிறார். அந்தக் கற்பனையை நமதாக்குவோம். நம் செபமாக்குவோம்.
அருள் நலமும், பேரன்பும் புடைசூழ்ந்து வரும் அந்த உலகில்... இளமைப் பருவத்தில் அடியெடுத்துவைக்கும் வளர் நிலை இளையோர் (Adolescents) பாதுகாப்பற்ற உணர்வில் தவிக்க மாட்டார்கள். மற்றவர்களை எப்போதும் சந்தேகமாய்ப் பார்த்து அவர்களையும் பாதுகாப்பற்ற நிலைக்கு உட்படுத்தாமல், அனைவரையும் கனிவோடு கருணையோடு நடத்துவார்கள்.
அந்த உலகில்... கணவனும், மனைவியும் தங்களுக்கு ஏற்பட்டக் காயங்களை மட்டும் கணக்குப் பார்த்து, மனதைக் கடினமாக்கிக்கொள்ளாமல், தங்கள் வாழ்க்கைத் துணையைக் கனிவோடு நடத்துவார்கள்.
அந்த உலகில்... வயது முதிர்ந்தவர்கள் நாளை எப்படி விடியப் போகிறதோ என்ற கவலையோடு உறங்கப் போகாமல், இனி தங்கள் வாழ்நாளெல்லாம் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் கனிவால் எல்லாமே நலமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் கண் அயர்வார்கள்.அந்த அழகான உலகில் இயற்கையிலும் வாழ்விலும் ஏற்படும் சுனாமிகளை நாம் மனதளவிலாவது சமாளிக்க முடியும். அந்த உலகை நாம் உருவாக்கி, அனைவரையும் வாழவைக்கும் வரம் வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.