2011-03-15 15:43:05

உலகில் ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடம்


மார்ச்15,2011: 2006ம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் உலக அளவில் இடம் பெற்ற ஆயுதப் பரிமாற்றங்கள், அதற்கு முந்தைய நான்காண்டு இடைவெளியில் இடம் பெற்றதைவிட 24 விழுக்காடு அதிகம் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் கூறியது.
உலகில் இடம் பெற்ற மொத்த ஆயுதத்தளவாட இறக்குமதிகளில் ஆசிய-பசிபிக் பகுதி 43 விழுக்காடு இறக்குமதி செய்துள்ளது, இதில் இந்தியா, சீனா, தென் கொரியா பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் பெருமளவில் இறக்குமதி செய்துள்ளன என்று இந்த மையம் வெளியிட்ட புதிய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்த 2006 மற்றும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளின் ஆயுத இறக்குமதியில் இந்தியா, சீனாவையும் விஞ்சிவிட்டது என்றுரைக்கும் அம்மையத்தின் அறிக்கை, தனது இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும் சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குமென இந்தியா 2009ம் ஆண்டில் நான்காயிரம் கோடி டாலைச் செலவழித்துள்ளது என்றும் தெரிவிக்கிறது.
இந்த நான்காண்டுகளில் உலக அளவில் இடம் பெற்ற ஆயுத ஏற்றுமதிகளில் அமெரிக்க ஐக்கிய நாடு முப்பது விழுக்காட்டைக் கொண்டு அது முதலிடத்தில் உள்ளது எனவும் அம்மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் Mark Bromley கூறினார். இதற்கு அடுத்த இடங்களில் இரஷ்யாவும் ஜெர்மனியும் உள்ளன
ஆசியா, மத்திய கிழக்கு, வட ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் கடும் போட்டி நிலவுவதாகவும் புரோம்லி தெரிவித்தார்.
சர்வதேச அளவில் இந்தியா மட்டும் அதிகபட்சமாக ஒன்பது விழுக்காடு ஆயுதங்களை வாங்கியுள்ளது







All the contents on this site are copyrighted ©.