2011-03-12 15:09:11

ஜப்பான் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திருத்தந்தை செபம்


மார்ச் 12,2011: ஜப்பானின் வடகிழக்குப் பகுதியை 8.9 ரிக்டர் அளவில் கடுமையாய்த் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த சுனாமி ஆழிப் பேரலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடனானத் தனது செபம் நிறைந்த ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Leo Jun Ikenaga க்குத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பிய தந்திச் செய்தியில், இந்தத் திடீர் இயற்கைப் பேரிடர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்துத் திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பேரிடரில் இறந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் திருத்தந்தையின் செபமும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவுக்கு வடக்கே செந்தை கடலோரப் பகுதியில் இவ்வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் பிற்பகல் 2.46 மணிக்கு இடம் பெற்ற இந்தப் பேரிடரில் 32 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின. இதில் வீடுகள், நகரின் உள்கட்டமைப்புகள், கப்பல்கள், வாகனங்கள், தொழிற்கட்டிடங்கள் உட்பட அனைத்தும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் 50 நாடுகளுக்கும் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுமார் 1300 பேர் இறந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
இன்னும், இப்பேரிடரின் தாக்கத்தால் Fukushima அணுசக்தி நிலையம் வெடித்ததில் பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.