2011-03-11 16:35:45

ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்கக் காரித்தாஸ் உதவி


மார்ச் 11,2011. ஜப்பானில் இவ்வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து இடம் பெற்ற சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் செய்வதில் முனைந்துள்ளது ஜப்பான் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு.
ஆசியக் காரித்தாஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும் ஜப்பான் காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான ஆயர் Isao Kikuchi இதில் பாதிக்கப்பட்ட மக்களுடனும் ஜப்பான் சிறுபான்மை கத்தோலிக்கச் சமூகத்துடனும் தனது ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று Fides செய்தி நிறுவனம் அறிவித்தது.
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் 8.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. சில இடங்களில் இடிந்த கட்டடங்களும் எண்ணெய் கிணறுகளும் தீப்பற்றி எரிந்தன. மியாகி (Miyagi) தீவுப் பகுதியில் பத்து மீட்டர் உயர இராட்சத அலை எழும்பியதால் தண்ணீர் வீடுகளில் புகுந்து மூழ்கின. இதனால் விமான நிலையங்கள் மூடப்பட்டடன.இந்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேசியா, பாப்புவா நியுகினி, தாய்வான், பிலிப்பைன்ஸ் போன்ற பசிபிக் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜப்பானில் இந்த ஒரு வார காலத்திற்குள் இது 2வது பெரிய நிலநடுக்கம் ஆகும்.







All the contents on this site are copyrighted ©.