2011-03-11 16:37:37

உலகின் மிகப் பெரிய திருச்சிலுவைப்பாதை உரோம் Via della Conciliazione ஒப்புரவுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது


மார்ச் 11,2011. ஆள் உயர உருவங்களால் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய திருச்சிலுவைப்பாதை வத்திக்கான் பேதுரு பசிலிக்கா பேராலயத்தை நோக்கி அமைந்திருக்கும் Via della Conciliazione என்ற ஒப்புரவுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இயேசுவின் திருப்பாடுகளைச் சித்தரிக்கும் 14 தலங்களைக் கொண்ட இந்தத் திருச்சிலுவைப்பாதையில் 49 உருவங்களும் 11 சிலுவைகளும் வைக்கப்பட்டுள்ளன. Brunelleschi, Donatello ஆகிய கலைஞர்களின் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி, இவ்வுருவங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளன.
தென் அமெரிக்க நாடான சிலே நாட்டின் Coquimbo நகரத்தில் வைக்கப்படுவதற்கென “Fundacion Cruz del III Milenio" என்ற மூன்றாம் மில்லென்யத்தின் திருச்சிலுவை அமைப்பு இத்திட்டத்தைத் தொடங்கியது. Pasquale Nava, Giuseppe Allamprese ஆகிய சிற்பிகள் இந்த உருவங்கள் அமைக்கும் வேலையை 2002ம் ஆண்டு தொடங்கினர். இதற்கு 22 ஆயிரம் பவுண்டு வெண்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உருவங்கள் அமைக்கும் இப்பணிகள் உரோம் விண்ணகப் போதகரின் பக்தச் சீடர்கள் பெண் அருட்சகோதரிகள் சபையினரின் இடத்தில் நடந்தன.
உரோம் Via della Conciliazione சாலையில் வைக்கப்பட்டுள்ள இச்சிலுவைப்பாதையை வத்திக்கான் பசிலிக்கா தலைமைக்குரு கர்தினால் Angelo Comastri இஞ்ஞாயிறு பகல் 11.30 மணிக்கு ஆசீர்வதித்து தவக்காலச் சிந்தனைகளை வழங்குவார். இச்சிலுவைப்பாதையின் முதல் தலத்தை இந்த மார்ச் முதல் தேதியன்று புதன் மறைபோதகத்திற்குப் பின்னர் திருத்தந்தை ஆசீர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தவக்காலம் தொடங்கி, வருகிற ஏப்ரல் 29 வரை இது உரோம் Via della Conciliazione சாலையில் வைக்கப்பட்டிருக்கும்.
இத்தாலி மற்றும் திருப்பீடத்தின் இறையாண்மையை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டு ஏற்பட்ட இலாத்தரன் ஒப்பந்தத்தைக் கொண்டாடும் வகையில் அதே ஆண்டில் பெனித்தோ முசோலினி இந்த Via della Conciliazione சாலையைத் திறந்து வைத்தார்.சிலே நாட்டு “Fundacion Cruz del III Milenio" என்ற அமைப்பானது 1987ல் திருத்தந்தை 2ம் ஜான் பால் அந்நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் பலனாக உருவாக்கப்பட்டது. 1998ல் 280 அடி உயரச் சிலுவை Coquimbo நகரில் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த சிலுவைப்பாதை அங்கு வைக்கப்படவுள்ளது.







All the contents on this site are copyrighted ©.