2011-03-10 15:43:50

மனித சமுதாயத்தின் முன்னேற்றம் மனிதர்களை மையப்படுத்த வேண்டும் - திருப்பீட அதிகாரி


மார்ச் 10,2011. மனிதர்கள் முன்னேற்றத்தின் மையங்களாய் கருதப்படவேண்டுமேயொழிய முன்னேற்றத்தின் தடைகளாய் கருதப்படக் கூடாதென்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.கூட்டமொன்றில் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் சார்பில் இப்புதனன்று பேசிய பேராசிரியர் Charles Clark இவ்வாறு கூறினார்.
வருகிற 2012ம் ஆண்டு ஜூன் மாதம் பிரேசில் நாட்டின் Rio de Janeiroவில் நடைபெறவுள்ள Rio+20 என்ற உலக முன்னேற்ற கருத்தரங்கிற்கு முன்னேற்பாடாக நிகழ்ந்த ஐ.நா.வின் கூட்டமொன்றில் திருப்பீடத்தின் சார்பில் இக்கருத்தை வலியுறுத்தினார் பேராசிரியர் Clark.
மனித சமுதாயம் திட்டமிடும் எந்த ஒரு முன்னேற்றமும் மனிதர்களை மையப்படுத்தியதாகவும், மனிதர்களின் முழு முன்னேற்றத்தை மனதில் கொண்டதாகவும் இருப்பதையே திருப்பீடம் விரும்புகிறதென பேராசிரியர் Clark சுட்டிக்காட்டினார்.
மனித சமுதாயம் மனிதர்களை முன்னேற்றத்தின் தடைகளாய் பார்க்கும்போது, முக்கியமாக ஏழைகள், கருவில் வளரும் குழந்தைகள், வயது முதிர்ந்தோர் போன்ற சமுதாயத்தில் வலுவிழந்தவர்களையே இவ்விதம் நோக்கி வருகின்றது என்ற தன் கவலையையும் வெளியிட்டார் பேராசிரியர் Clark.முழு மனித சமுதாயத்தை மையப்படுத்தாத எந்த ஒரு முன்னேற்றமும் உலகின் வளங்களை தேவைக்கும் அதிகமாய் உறுஞ்சி, அவற்றின் மூலம் பணம் படைத்தவர்களை மட்டுமே முன்னேற்றும் ஆபத்து உள்ளதென்று திருப்பீடத்தின் சார்பில் பேசிய பேராசிரியர் Charles Clark எடுத்தரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.