2011-03-10 15:43:39

திருநீற்றுப் புதன் திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரை


மார்ச் 10,2011. தவக்காலத்தில் மேற்கொள்ளும் செபம், தவம், தர்மம் ஆகியவைகளை நமது சொந்த புகழுக்காகச் செய்யாமல், இறைவன் மேல் கொண்ட அன்பிற்காக மேற்கொள்ள வேண்டுமென்று திருத்தந்தை கூறினார்.
திருநீற்றுப் புதன் அல்லது சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் இப்புதன் பிற்பகலில் உரோம் நகரில் தவக்கால ஊர்வலத்தையும், திருப்பலியையும் முன்னின்று நடத்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
"உங்கள் முழு மனதுடன் என்னிடம் திரும்பி வாருங்கள்" என்று இறைவன் எப்போதும் விடுக்கும் அழைப்பைச் சிறப்பான முறையில் கேட்கவும், அவரது கருணையை மீண்டும் ஆழமாய் உணரவும் இத்தவக்காலம் நமக்குத் துணைபுரிய வேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
செபம், தவம், தர்மம் ஆகிய மூன்றும் இஸ்ரயேல் மக்களின் காலத்திலிருந்தே பழக்கத்தில் உள்ள பக்தி முயற்சிகள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நம் சுயப் புகழைத் தேடுவதற்கு இவற்றைப் பயன்படுத்துவது இம்முயற்சிகளின் இறுதிப் பலனை நாம் அடையாமல் நம்மைத் தடுத்து விடும் என்று கூறினார்.
நமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நாற்பது நாட்கள் மிகவும் சக்தி வாய்ந்த நாட்கள், எனவே இந்நாட்களில் இறை வார்த்தைகளைக் கேட்கவும், செபத்திலும், பிற உடல் ஒறுத்தல் முயற்சிகளிலும் நம் நேரத்தைச் செலவழிக்கவும் வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.திருப்பலிக்கு முன்னதாக, உரோம் நகரில் உள்ள Aventine குன்றில் மேல் அமைந்துள்ள புனித ஆன்செல்ம் கோவிலில் பெனடிக்ட் சபை துறவிகளுடன் திருத்தந்தை ஒரு சிறிய செப வழிபாட்டில் கலந்து கொண்டார். அதன் பின் அக்கோவிலிலிருந்து அருகிலிருந்த புனித சபினா ஆலயத்திற்கு ஊர்வலமாய் வந்து, அங்கு திருநீற்றுப் புதன் திருப்பலியை நிகழ்த்தினார்.







All the contents on this site are copyrighted ©.