2011-03-09 15:27:23

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


மார்ச் 09, 2011. கடந்த சில வாரங்களாக மழையும் மப்புமாக இருந்த உரோம் நகர கால நிலை, இவ்வாரத்தில் தெளிவான வானத்துடன் விளங்குவது மட்டுமல்ல பெருமளவில் உல்லாசப்பயணிகளும் உரோம் நகர் நோக்கி வருவதற்கு வழிவகுத்துள்ளது என்று கூறலாம். பெருமளவான திருப்பயணிகள் திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தை நிறைத்திருக்க, பாப்பிறை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று அகில உலக திருச்சபையில் சிறப்பிக்கப்பட்ட திருநீற்றுப்புதன் குறித்து தன் சிந்தனைகளை அவர்களோடு பகிர்ந்து கொண்டார்.
இயேசுவின் உயிர்ப்பை நோக்கிய தவக்காலப் பயணத்தின் துவக்கமாக திருநீற்றுப்புதனை இன்று சிறப்பிக்கிறது திருச்சபை. உயிர்ப்பின் மகிழ்வை நோக்கி சிலுவையின் வழியாக நம்மை வழி நடத்திச் செல்லும் பாதையில் கிறிஸ்துவோடு இணைந்து அவரைப் பின்பற்றிச் செல்கையில் கிட்டும் புதுப்பித்தல் மற்றும் மனமாற்றத்தின் தொடர்பயணமே கிறிஸ்தவ வாழ்வு என்பதாகும். நாம் கிறிஸ்துவைப் பின்பற்றும் முதல் பாதையானது திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் வழியானதாகும். திருவழிபாட்டிலேயே கிறிஸ்துவும் அவரின் மீட்பு வல்லமையும் பிரசன்னமாயிருந்து நம் வாழ்வில் செயற்பாடுடையதாக மாறுகின்றது. இத்தவக்காலத் திருவழிபாட்டில், திருமுழுக்குப் பெறுவதற்கென தங்களையே தயாரித்துக் கொண்டிருப்பவர்களோடு இணைந்து சென்றுகொண்டிருக்கும் நாம், கிறிஸ்துவில் நாம் மீண்டும் பிறப்பதில் கிட்டும் அருட்கொடைகளுக்கென நம் இதயங்களைப் புதிதாகத் திறப்போம். இந்த ஆன்மீகப் பயணமானது பாரம்பரியமாக, உண்ணா நோன்பு, வறியோர்க்கு உதவுதல், ஜெபம் ஆகியவற்றால் நிறைந்து காணப்படுவதாகும். இந்த மூன்று பக்தி நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று திருச்சபைத் தந்தையர்கள் எடுத்துரைத்துச் சென்றுள்ளனர். புனித அகுஸ்தினார், உண்ணாநோன்பையும் வறியோர்க்கு உதவுதலையும் செபத்தின் சிறகுகள் என அழைக்கிறார். ஏனெனில், கிறிஸ்து நமக்கென ஏற்பாடு செய்துள்ள இடமான வானுலகின் செல்வங்களைத் தேடவும் அவை நோக்கிப் பறந்துச் செல்லவும் உதவும் நோக்கில் நம் இதயங்களைத் தயாரிப்பவை உண்ணா நோன்பும் வறியோர்க்கு உதவுதலும் ஆகும். தவக்காலம் துவங்கும் இவ்வேளையில், இயேசுவை மிக நெருக்கமாகப் பின்பற்றுவதற்கான அவரின் அழைப்பை ஏற்போம். செபத்திற்கும் மனமாற்றத்திற்குமான நம் அர்ப்பணத்தைப் புதுப்பித்து, புதியதோர் வாழ்வு நிலையிலும் மகிழ்விலும் கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாட நம்மைத் தயாரிப்போம்.
தவக்காலத்தின் இவ்வழைப்புடன் தன் புதன் பொது மறைபோதகத்தை நிறைவுச்செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.