2011-03-07 14:52:33

வாரம் ஓர் அலசல் – வாழட்டும் பெண்ணினம் பல்லாண்டு!


மார்ச்07,2011. அன்பர்களே! 2011ம் ஆண்டு, மார்ச் 8, அனைத்துலகப் பெண்கள் தினத்திற்கு நூறாண்டு. இக்காலத்தில் பெண்கள், நாட்டின் தலைவர், பிரதமர், முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவி, விண்வெளி வீராங்கணை எனப் பல பரிமாணங்களில் உருவெடுக்கக் காரணமான நாள் 1911, மார்ச் 8. வேலைக்கு ஏற்ற ஊதியம், குறிப்பிட்ட வேலைநேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை போன்ற உரிமைகளைக் கோரி 1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி பிரான்சில் பெண்களின் புரட்சிகள் வெடித்தன. அன்று கடும் புரட்சிப் புயலைக் கிளப்பிய இப்பெண்களைக் கண்டு ப்ரெஞ்ச் அரசரே பயந்தார். இதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் பெண்ணுரிமைப் போராட்டங்கள் கிளம்பின. 1857ல், அமெரிக்காவில் உழைக்கும் பெண்களின் முதல் குரல் கேட்கத் தொடங்கியது. நியுயார்க்கில் பெரும்பாலும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் 16 மணி நேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக்கூட நிர்வாகத்தில் இருந்தவர்களின் உடல்பசிக்கு இணங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதே அமெரிக்காவில் 1908ல் பெண்கள் வாக்குரிமை கேட்டுக் கொதித்தெழுந்தனர். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனையை, இத்தகைய எழுச்சிகள் உலகெங்கும் பரப்பின. இதன் பயனாக, 1909, பிப்ரவரி 28ல் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர், 1910ல் 17 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கோபன்ஹாகனில் Clara Zetkin என்ற ஜெர்மானியப் பெண்ணின் தலைமையில் அனைத்துலக பெண்கள் மாநாட்டை நடத்தினர். அதில் பெண்கள் தினம் உலக அளவில் கொண்டாடப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், அனைத்துலக பெண்கள் அமைப்பும் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில், 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் முதல் அனைத்துலக பெண்கள் தினம் சிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, 1913ம் ஆண்டு பிப்ரவரி கடைசி ஞாயிறன்று இரஷ்யப் பெண்கள் அமைதிக்காகக் குரல் எழுப்பி முதல் அனைத்துலகப் பெண்கள் தினத்தைக் கடைபிடித்தனர். இந்த நாள், இரஷ்யாவில் அனுசரிக்கப்பட்ட ஜூலியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி 23. ஆனால் அச்சமயம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட கிரகோரியன் நாட்காட்டியின்படி அந்நாள் மார்ச் 8. எனவேதான் உலகெங்கும் மார்ச் 8ம் தேதி அனைத்துலகப் பெண்கள் தினம் சிறப்பிக்கப்படுகின்றது. இரஷ்யா, சீனா, வியட்னாம், பலகேரியா போன்ற நாடுகளில் இவ்வுலக தினம் அரசு விடுமுறை நாள் ஆகும்.
ஆஸ்திரேலியப் பெண்ணியவாதிகள் இச்செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு சிட்னி பாலத்தில் இந்த அனைத்துலகப் பெண்கள் தினத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் முதல் விழாவைத் தொடங்கி வைக்கிறார்கள். அதைத் தொடர்ந்து உலகமெங்கும் உள்ள பல நகரங்களில் 1500க்கும் மேலான பெண்கள் தின நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. தமிழகத்தின் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் யூனியனில் இத்தினம் சிறப்பிக்கப்படும் விதம் பற்றிப் பேசுகிறார் அருட்சகோதரி லில்லியன் ம.ஊ.ச. இவர் செர்வைட் சமூகப்பணி மைய இயக்குனர்.
RealAudioMP3 செர்வைட் சமூகப்பணி மையமும் சக்தி மகளிர் இயக்கமும் சேர்ந்து இத்தினத்தை 5 பஞ்சாயத்துக்களில் சிறப்பிப்பதாகச் சொன்னார் அருட்சகோதரி லில்லியன். நாகபட்டினம் இயேசு சபையினர் மையமும் இவ்வுலக தினத்தையொட்டி விதவைகளின் மறுவாழ்வுக்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. இலங்கையில் நடந்து முடிந்த போரால் ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாகவும் பழைய போராளிகளாகவும் அல்லற்படுகிறார்கள். இப்பெண்களுக்காக குரல் எழுப்புவதாக இலங்கை காரித்தாஸ் இயக்குனர் அருட்திரு ஜார்ஜ் சிகாமணி தெரிவித்தார்.
“கல்வி, பயிற்சி, அறிவியல், மற்றும் தொழிற்நுட்பத்தில் சமவாய்ப்பு : பெண்களுக்கானத் தரமான வேலைக்கு வழி” என்ற தலைப்பில் இந்த நூறாம் ஆண்டு பெண்கள் தினம் உலக அளவில் சிறப்பிக்கப்படுகின்றது. இத்தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், “சமுதாயத்தில் பெண்களின் முழுமையான, சமத்துவமானப் பங்கெடுப்பின் மூலமாக மட்டுமே வளர்ச்சியும் அமைதியும் நீதியும் நிறைந்த சமூதாயத்தை அமைக்க முடியும்” என்று கூறினார். “இவ்வாண்டில் பெண்களுக்குக் கல்வி, பயிற்சி மற்றும் தொழிநுட்பத்தில் சமவாய்ப்பு வழங்கப்படுவதில் கவனம் செலுத்தப்படும். வீட்டிலும் பள்ளியிலும் பணியிடத்திலும் சமூகத்திலும் பெண்கள் நலிந்த குழுவாகவே அடிக்கடி நோக்கப்படுகின்றனர். பல நாடுகளில் பெண்கள் நாடாளுமன்றங்களில் உறுப்பினர்களாக இருந்தாலும் தீர்மானம் எடுக்கும் துறைகளில் அவர்களின் பங்கெடுப்புக் குறைவாகவே இருக்கின்றது. பத்து விழுக்காட்டுக்குக் குறைவான நாடுகளிலே பெண்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்” என்றார்.
பான் கி மூன் கூறியிருப்பது போல, இவ்வுலக தினத்திற்கு நூறு வயது ஆகியிருந்தாலும் பெண்கள் இன்றும் இரண்டாம்தரக் குடிமக்களாகவே இருக்கின்றனர். போர் இடம் பெறும் இடங்களில் அவர்கள் பாலியல் இன்பப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். அமெரிக்கப் பேராசிரியர் Siwan Anderson நடத்திய ஆய்வின்படி சீனாவிலும் இந்தியாவிலும் காணாமற்போகும பெண்களில் சுமார் 40 விழுக்காட்டினர் 45ம் அதற்கு மேற்பட்ட வயதினருமாவர். இதில் ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதி மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. சீனாவில் மட்டும் ஐந்து கோடிப் பெண்கள் காணாமற்போயுள்ளனர். விதவைப் பெண்களின் இறப்பு உலகிலே அதிகமாக இந்தியாவில்தான் இடம் பெறுகின்றது. உலகின் உணவு உற்பத்தியில் பாதிக்குப் பெண்கள் பொறுப்பாக இருந்தாலும் உலக வருவாயில் 10 விழுக்காடு மட்டுமே அவர்களுக்குச் சொந்தமாகிறது என்று யூனிசெப் நிறுவனமும் அறிவித்தது.
2009ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலக மக்கள்தொகையில் 49 விழுக்காட்டினர் பெண்கள். பெண்களை மிகக் குறைவாகக் கொண்டிருந்த நாடு கத்தார். அங்கு பெண்களின் விகிதம் 24.6 விழுக்காடாகும். சிறுமிகளின் ஆயுட்காலம் 68.07. இது சிறுவர்களைவிட ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் அதிகம். உலகில் எழுத வாசிக்கத் தெரியாத வயது வந்தவர்கள் 20 விழுக்காட்டினர் இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள். 1952ல் அரசி 2ம் எலிசபெத் பிரிட்டன் அரசியானார். அதன் பின்னர் 2010ம் ஆண்டில் 27 பெண்கள், நாடு அல்லது அரசின் தலைவர்களாக இருந்தார்கள். 1901ம் ஆண்டிலிருந்து 813 பேருக்கும் 20 நிறுவனங்களுக்கும் நொபெல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு தடவைகள் நொபெல் விருது பெற்ற மேரி கியூரி அம்மையார் உட்பட நொபெல் விருதுகளைப் பெற்ற மொத்தப் பெண்கள் 41.
சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக, குறைந்தது ஒரு வன்முறையாவது ஒரு நாளில் நடப்பதை இன்று தினசரிகளிலும் தொலைகாட்சிகளிலும் அறிய முடிகின்றது. யாரா என்ற 13 வயதுப் பெண் கொலை செய்யப்பட்ட கொடூரம் இத்தாலிய ஊடகங்களில் இந்நாட்களில் தினசரிச் செய்தியாக வருகின்றது. தமிழகத்தின் ஆத்தூரில் 13 வயது சிறுமிக்கு பெற்றோர்களே கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக இத்திங்களன்று செய்தி வெளியாகியிருந்தது. 13 வருடங்கள் உள்நாட்டுப் போர் நடந்த ஆப்ரிக்க நாடான புருண்டியில், பெண்கள் அரசியலில் பங்குபெறுவது உட்பட எல்லா நிலைகளிலும் சமத்துவம் பெறுவதற்கு ஆண்களுடன் கடுமையாய்ப் போராட வேண்டியிருக்கிறது. போர்களில் பெண்கள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்று அந்நாட்டு அதிகாரி கத்ரீன் மபோபோரி கூறுகிறார்.
அறிவியலாளர் சொல்கிறார்கள் : “ஆண்களைவிட பெண்களே அதிகம் சக்தி வாய்ந்தவர்கள். இவர்களைக் குளிரும் வெப்பமும் அதிகமாகப் பாதிப்பதில்லை. இவர்களிடம் இயல்பிலே நல்ல மனபலமும் உள்ளது. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் இரண்டு வாரங்களுக்கு முன்னே நடக்கப் பழகி விடுகின்றன. விரைவில் பல்முளைப்பதும் வார்த்தைகளைச் சுத்தமாக உச்சரிப்பதும் பெண் குழந்தைகள்தான். இவர்களுக்குப் புத்திக்கூர்மை அதிகம்” என்று.
இக்கூற்றுக்கு பல பெண் சாதனையாளர்கள் உண்மை வடிவமும் கொடுத்து வருகிறார்கள். திண்டிவனத்தைச் சேர்ந்த பிறவியிலேயே பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் என்று கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது. இந்தத் தனது வெற்றிக்குத் தனது தாயின் உற்சாகமூட்டும் வார்த்தைகளே காரணம் என்கிறார். “உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித் தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார். என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக் கொண்டே இருக்க வேண்டும்” என எனது தாய் அடிக்கடி என்னிடம் கூறுவார் என்கிறார் சுஜிதா.
காஷ்மீரில் வாழும் ருக்சானா என்ற வீரப் பெண், தன் வீட்டில் நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவரைக் கொன்றுவிட்டு மற்றவர்களை அலறி அடித்து ஓடும்படிச் செய்த வீரச் செயலைப் பார்த்து இந்திய அரசுத் தலைவரே வியந்து விருது கொடுத்திருக்கிறார்.
அன்பர்களே, நூற்றாண்டு காணும் இந்த உலகப் பெண்கள் நாளில், வீட்டிலும் நாட்டிலும் சாதனைப் பெண்களை, வீரப் பெண்களை ஊக்குவித்துப் பெருமைப்படுத்துவோம். மண்ணுக்கு மனிதம் தரும் பெண்ணினத்தைப் போற்றுவோம். பெண்ணினம் உய்வு அடைந்தால் மட்டுமே இந்தப் புவி உய்வு அடையும்.







All the contents on this site are copyrighted ©.