2011-03-07 15:31:24

மதச் சுதந்திரத்தைக் காக்கும் தாகத்தை பாகிஸ்தான் அமைச்சரின் மரணம் நம்மில் எழுப்புகின்றது - திருத்தந்தை


மார்ச் 07,2011. மதச் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் காக்கும் தாகத்தை பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhattiன் மரணம் நம்மில் எழுப்புகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், பாகிஸ்தான் அமைச்சருக்காகவும், லிபிய மக்களுக்காகவும் செபிக்கும்படி கூறிய திருத்தந்தை, அமைச்சர் Bhattiன் தியாகம் மக்களின் மனசாட்சிகளைத் தட்டியெழுப்பி, வீரத்தையும் அர்ப்பணத்தையும் வளர்க்க வேண்டும் என்று கூறினார்.
ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் அண்மையில் மக்கள் மேற்கொண்டுள்ள பல்வேறு போராட்டங்களைப் பதட்டத்துடனும், அக்கறையுடனும் தான் ஒவ்வொரு நாளும் கவனித்து வருவதாக திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இவர்கள் அனைவருக்கும், சிறப்பாக லிபிய மக்களுக்குத் தன் செபங்களை உறுதியளித்த பாப்பிறை, துன்புறும் அனைத்து மக்களுக்கும் நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தானில் நிலவி வரும் தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த சிறுபான்மைத் துறை அமைச்சர் Shahbaz Bhatti, கடந்த புதனன்று இஸ்லாமாபாதில் கொலை செய்யப்பட்டார். அவரது ஆன்ம சாந்திக்கானத் திருப்பலி உரோம் நகரின் புனித பேதுரு கல்லூரியில் பல்சமய உரையாடலுக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்களால் இஞ்ஞாயிறு மாலை நிறைவேற்றப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.