2011-03-07 15:33:33

தேவ நிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர் யாராயினும் அவர்கள் ஆபத்தில் உள்ளனர் - Federico Lombardi


மார்ச் 07,2011. தேவ நிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர் யாராயினும் அவர்கள் ஆபத்தில் உள்ளனர் என்று திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் கூறினார்.
கடந்த புதனன்று பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhatti கொலை செய்யப்பட்டதைக் குறித்து இத்தாலியத் தொலைக் காட்சி நிகழ்ச்சியான "Octava Dies"ல் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசுசபைக் குரு Federico Lombardi இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கரான Shahbaz Bhattiம், சனவரியில் தம் மெய்காப்பாளரால் சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாப் ஆளுநரும், இஸ்லாமியருமான Salman Taseerம் தேவ நிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை Lombardi, இருவருமே தங்களுக்கு வந்த கொலை மிரட்டல்களையெல்லாம் மீறி, மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான சமயச் சுதந்திரத்திற்காக உயிர் துறந்தவர்கள் என்று எடுத்துரைத்தார்.
உலகின் பன்னாட்டுத் தூதர்களை இவ்வருடம் சனவரியில் சந்தித்த திருத்தந்தை, சமயச் சுதந்திரம் குறித்து பேசுகையில் பஞ்சாப் ஆளுநர் பற்றி குறிப்பிட்டதை அருள்தந்தை Lombadi சுட்டிக் காட்டினார்.
பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள இவ்வன்முறைகள், அங்குள்ள கிறிஸ்தவ மக்களின் பாதுகாப்பைக் குறித்து கவலையை உருவாக்கினாலும், தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து உயிர் துறந்த இவ்விருவரும் கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்திருப்பது நம்பிக்கையையும் மனதில் எழுப்புகின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் Federico Lombardi கூறினார்.








All the contents on this site are copyrighted ©.