2011-03-07 15:29:37

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை


மார்ச் 07,2011. இயேசு கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படும் வாழ்வில்தான் மனிதர்களாகிய நாம் நிறைவைக் காண முடியுமே தவிர, அதிகாரம், வெற்றி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் அல்ல என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, பாறையின் மீது வீடு கட்டுவோரையும், மணல் மீது வீடுகட்டுவோரையும் குறித்து இயேசு இஞ்ஞாயிறு நற்செய்தியில் சொன்னதைக் குறிப்பிட்டு இவ்வாறு கூறினார்.
மனித வரலாற்றில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு இடத்திலும் இயேசுவை அறிந்துகொள்ளும் வரம் பெற்ற ஒவ்வொருவரும் நற்செய்தியின் வழியாகவும் இன்னும் பிற வழிகளிலும் கடவுளின் குரலைக் கேட்பதற்கும் அவரைச் சந்திக்கவும் அழைக்கப்படுகின்றனர் என்று கூறிய திருத்தந்தை, இன்றைய உலகின் மனிதர்கள் தங்கள் வாழ்வின் ஆதாரங்களாய் அதிகாரம், வெற்றி, செல்வம் ஆகிய உறுதியற்ற கோட்பாடுகளில் கவனம் செலுத்துகின்றனர் என்ற தன் வருத்தத்தை வெளியிட்டார்.
கிறிஸ்துவே நமது வாழ்வின் அசைக்க முடியாத அடித்தளம் என்றும், அலைபாயும் நம் மனங்களை அவர் மட்டுமே அமைதிபடுத்த முடியும் என்றும் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
கணப்பொழுது தோன்றி மறையும் செல்வம் நம்மில் வெற்றிடத்தை உருவாக்கும் என்றும், நம் வாழ்வை நிறைவு செய்வதற்கு இறை வார்த்தையை ஒவ்வொரு நாளும் நாம் நாடுவோம் என்றும் திருத்தந்தை தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.