2011-03-05 14:06:03

மார்ச் 06, வாழந்தவர் வழியில்...


ஓவியக்கலை, சிற்பக்கலை இரண்டிலும் உலகப்புகழ் பெற்ற ஒரு கலைஞர் மிக்கேலாஞ்சலோ. இவரது இயற்பெயர் Michelangelo di Lodovico Buonarroti Simoni. இவர் இத்தாலியின் Tuscany பகுதியில் 1475ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி பிறந்தார்.
தனது 21வது வயதில் உரோம் நகர் வந்து சேர்ந்தார். அதுமுதல் இவர் படைத்த சிற்பங்களும், ஓவியங்களும் உலகின் தலைசிறந்த கலைக் கருவூலங்களாய்ப் பாதுகாக்கப்படுகின்றன. உயிரிழந்த இயேசுவின் உடலை மடியில் தாங்கி அமர்ந்திருக்கும் அன்னை மரியாவின் "Pieta" திருஉருவச் சிலை இவர் படைத்த முதல் சிற்பம். இந்தத் திருஉருவத்தை இவர் வடித்து முடித்தபோது இவருக்கு வயது 22.
பிற புகழ்பெற்ற சிற்பிகளால் பயனற்றது என்று ஒதுக்கப்பட்ட ஒரு பளிங்குக் கல்லில் இவர் உருவாக்கியது இன்று உலகப் புகழ்பெற்ற தாவீது சிலை. இந்தச் சிலையை வடித்து முடிக்கும்போது மிக்கேலாஞ்சலோவின் வயது 26.
வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தின் கூரையில் இவர் வரைந்துள்ள ஓவியங்களும் உலகப் புகழ்பெற்றவை. நான்கு ஆண்டுகள் படுத்தபடியே இவர் உருவாக்கிய இந்த ஓவியங்களில் கடவுள் ஆதாமைப் படைக்கும் காட்சி மிகவும் புகழ்பெற்றது. லியோனார்டோ டா வின்சி வரைந்துள்ள இறுதி இரவுணவு என்ற ஓவியமே உலகில் மிக அதிகப் புகழ் பெற்றதென்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்தப்படியாக புகழ் பெற்ற ஓவியம் ஆதாமின் படைப்பு.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் கோபுரத்தைத் திட்டமிட்டு, வரைந்து தந்தவரும் மிக்கேலாஞ்சலோவே. அக்கோபுரம் கட்டி முடிக்கப்படுவதற்கு முன், 1564ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி உரோம் நகரில் இவர் காலமானார். மிக்கேலாஞ்சலோ இவ்வுலகில் வாழ்ந்தது 88 ஆண்டுகள். ஆனால், அவரது கலைப் படைப்புகள் 450 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றன. இனியும் வாழும்.







All the contents on this site are copyrighted ©.