2011-03-04 16:24:57

பாகிஸ்தான் சிறுபான்மைத்துறை அமைச்சர் பாட்டி சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை


மார்ச் 04,2011. பாகிஸ்தான் சிறுபான்மைத்துறை அமைச்சர் ஷபாஸ் பாட்டி சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவரான லாகூர் பேராயர் இலாரன்ஸ் ஜான் சல்தான்ஹாவுக்கு அனுப்பியுள்ள தந்தியில், ஷபாஸ் பாட்டியின் இறப்பால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும் அந்நாட்டினருக்குமானத் திருத்தந்தையின் அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி காஸ்தெல் கண்டோல்போவில் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஷபாஸ் பாட்டி, பாகிஸ்தானில் அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குத் தன்னை அர்ப்பணிப்பதாகவும் உறுதி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமைச்சர் பாட்டி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹாவும், பாகிஸ்தான் திருச்சபைப் பிரதிநிதியும் வெளியிட்ட அறிக்கையில், அரசு சிறுபான்மையினரின் வாழ்வு மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தவறியுள்ளது என்று குறை கூறியுள்ளனர்.
நாட்டில் இடம் பெறும் தீவிரவாதச் செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு நடைமுறைக்கு உகந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் அத்தலைவர்களின் அறிக்கை வலியுறுத்துகிறது.







All the contents on this site are copyrighted ©.