2011-03-04 16:23:41

திருத்தந்தை, ஐஸ்லாந்து அரசுத்தலைவர் சந்திப்பு


மார்ச் 04,2011. ஐஸ்லாந்து நாட்டு அரசுத்தலைவர் Ólafur Ragnar Grímssonஐ இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் நூலகத்தில் 23 நிமிடங்கள் தனியே இடம் பெற்ற இச்சந்திப்பில், திருப்பீடத்துக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையேயான ஆயிரம் வருட உறவு குறித்தும் இதற்குச் சான்றாக அந்தத் தீவிற்குக் கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துச் சென்ற Gudrid Thorbjarnardottir இருக்கிறார் என்றும் பேசப்பட்டது.
இந்த நாட்டில் பல்வேறு சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வது குறித்தும் அந்நாட்டின் சிறுபான்மை கத்தோலிக்க சமூகம், கல்வி மற்றும் சமூகப் பணியில் ஆற்றி வரும் நற்சேவைகள் குறித்தும் பேசப்பட்டன.
அரசுத்தலைவர் Ólafur, Gudrid Thorbjarnardottir என்ற கிறிஸ்தவரின் உருவச் சிலையையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். Gudrid, கிறிஸ்டோபர் கொலம்பசுக்கும் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்காவிலிருந்து ஐஸ்லாந்துக்குச் சென்ற முதல் பெண். அதுவும் முதல் கிறிஸ்தவர் என்று நம்பப்படுகிறது.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையே உறவுகளுக்கானத் துறைச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் ஐஸ்லாந்து அரசுத்தலைவர்
வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கின்ற ஐரோப்பிய தீவு நாடான ஐஸ்லாந்து 39,769 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு சுமார் மூன்று இலட்சத்து இருபதாயிரம் பேர் வாழ்கின்றனர்







All the contents on this site are copyrighted ©.